பாரம்பரிய சின்னமாகும் செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை!!
- இசக்கிராஜன்
திருநெல்வேலி:
ஆங்கிலேயர் காலத்தில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட செங்கோட்டை-கொல்லம் இடையிலான ரயில் பாதையில் உள்ள ஐந்து குகைகளையும், 13 கண் பாலத்தையும் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கலாச்சார செறிவு கொண்டது நமது நாடு. உலக கலாச்சாரங்களுக்கும், பாரம்பரியங்களுக்கும், வரலாற்றுக்கும் எந்தவித குறைச்சலும் இல்லாத நாடு இந்தியா.
![]() |
அப்படிப்பட்ட நமது நாட்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் பல வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வுகள் இடம் பெற்றன. அவற்றில் ஒன்றுதான் செங்கோட்டை-கொல்லம் இடையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதை.
ஆங்கிலேயர் ஆட்சியின் போது வணிகத்திற்காக தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கொச்சி துறைமுகத்திற்கும், கொச்சி துறைமுகத்திலிருந்து சென்னை துறைமுகத்தை இணைக்கவும், 1900-ம் ஆண்டு செங்கோட்டை வழியாக மலையை குடைந்து கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு மீட்டர் கேஜ் பாதையில் ரயில் விடப்பட்டது.
நூறு ஆண்டுகளை கடந்து விட்ட இந்த செங்கோட்டை-கொல்லம் மீட்டர் கேஜ் ரயில் பாதையில் ஆரியங்காவு, கழுதுருட்டி, தென்மலை, ஏழுகண் உள்ளிட்ட 5 மலை குகைகள் உள்ளன.
![]() |
இக்குகைகளின் நீளம் மொத்தம் 2800 அடிகளாகும். அதுபோக 13 கண் பாலம் ஒன்றும் உள்ளது.
செங்கோட்டைக்கும்-புனலூருக்கும் இடையே உள்ள இந்த பாதைகள் பெரும் புகழ் பெற்றவை. பல திரைப்படங்களில் இந்தக் குகைகள் நடித்துள்ளன. அதிலும் 13 கண் பாலம் பல படங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த குகைகளையும், 13 கண் பாலத்தையும் ரயில்வேயின் புராதன சின்னமாக பரமாரித்து, பாதுகாத்திட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சமீபத்தில் இப்பகுதிக்கு வந்த ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு இத்தகவலைத் தெரிவித்தார்.
வரலாறு படைத்த இந்த ரயில் பாதையும், பாலமும், புராதனச் சின்னங்களாக புதிய வரலாறு படைக்கப் போவது இந்தப் பகுதிக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.














Click it and Unblock the Notifications