கோபி: நகைக் கடையில் 200 பவுன் நகை கொள்ளை!
கோபிச்செட்டிபாளையம்
கோபிச்செட்டிபாளையத்தில் இன்று அதிகாலை நகைக் கடையை உடைத்து 200 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கோபி, வாஸ்து நகரைச் சேர்ந்த சரவணன்(38) அனுமந்தராயர் கோவில் தெருவில் நகைக் கடை வைத்துள்ளார்.
இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் கடையின் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. கடையின் மேல்மாடியில் குடியிருக்கும் அனீபா என்பவர் இதைக் கேட்டு கீழே வந்து பார்த்துள்ளார்.
அப்போது கறுப்பு நிற பேண்ட்டும், சிவப்பு நிற சட்டையும் அணிந்த ஒருவனும் இன்னொருவனும் அங்கிருந்து ஓடினர். ஓடும்போது இருவரும் இந்தியில் பேசியுள்ளனர்.
அவர்களை பிடிக்க அனிபா முயன்றார். ஆனால், முடியவில்லை. இதையடுத்து சரவணனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவர் வந்து பார்த்தபோது கடையில் இருந்த நகைகள் அனைத்தும் கொள்ளை போனது தெரிந்தது. இதையடுத்து போலீஸில் புகார் செய்யப்பட்டது.
கோபிசெட்டிபாளையம் டி.எஸ்.பி.செல்வகுமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். மோப்ப நாய்கள், கைரேகை நிபுணர்களுடன் போலீசார் விசாரணை நடத்தினர்.
மோப்ப நாய் கடையிலிருந்து சிறிது தூரம் ஓடியபின் நின்றுவிட்டது. இதனால் கொள்ளையர்கள் ஏதாவது வாகனத்தில் தப்பியிருக்கலாம் எனத் தெரிகிறது.
மிகுந்த நெரிசலான கோவில் தெருவில் நடந்துள்ள இந்தக் கொள்ளை கோபியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications