சென்னை அருகே பிரமாண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
சென்னை:சென்னை அருகே செம்பரம்பாக்கத்தில் நாட்டிலேயே இரண்டாவது பெரிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வர் கருணாநிதி வருகிற 19ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்று செம்பரம்பாக்கம் ஏரி. இந்த ஏரிக்கு அருகே ரூ. 134.9 கோடி செலவில், தினசரி 530 மில்லியன் லிட்டர் நீரை சுத்திகரிக்கும் கொள்ளளவு கொண்ட பிரமாண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.நாட்டின் 2வது மிகப் பெரிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நிலையம் டெல்லியில் உள்ளது. அதன் கொள்ளளவு 653 மில்லியன் லிட்டர் ஆகும்.
பிரெஞ்சு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இங்கு தண்ணீர் சுத்திகரித்து குடிநீர்த் தேவைக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது. பிரான்ஸைச் சேர்ந்த டெக்ரமான்ட் சா என்ற நிறுவனம் செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துள்ளது. அடுத்த 7 வருடங்களுக்கு இந்த நிறுவனமே இந்த நிலையத்தைப் பராமரித்து வரும்.
செயல்படும் முறை:
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர், காஸ்கேட் ஏரேட்டர் மூலம் அனுப்பப்படுகிறது. அப்போது தண்ணீரில் ஆக்சிஜன் கலக்கப்படும். இதன் மூலம் தண்ணீரின் தரம் உயருகிறது, அதில் உள்ள இரும்புத் துகள்கள் ஆக்சிஜனாக மாற்றப்படுகிறது.
அங்கிருந்து கிளாரிபையர் மூலமாக முதல் சுத்திகரிப்பு சேம்பருக்கு அனுப்பப்படுகிறது. அங்கு தண்ணீரில் உள்ள பிற அசுத்தப் பொருட்கள் களையப்படுகின்றன.
பிறகு அக்குவாசூர் 5க்கு போகும் தண்ணீர், மேலும் சுத்தப்படுத்தப்படுகிறு. இறுதியாக, தண்ணீரில் குளோரின் கலக்கப்பட்டு குடிநீர் விநியோகக் குழாய்கள் மூலம் விநியோகத்திற்கு அனுப்பப்படும்.
ஒரு கிலோ லிட்டர் தண்ணீரை சுத்தப்படுத்த ரூ. 1.25 செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கிருந்து நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து தண்ணீரை குழாய்கள் மூலம் எடுத்து வருவற்காக ரூ. 88.65 கோடி மதிப்பில், 21 கிலோமீட்டர் தொலைவுக்கு குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் 15.5 கிலோமீட்டர் தெலைவுக்கு குழாய் பதிக்கும் பணி முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பகுதியில் 2 மாதங்களில் குழாய் பதிக்கும் பணி முடிவடையும்.
தெலுங்கு கங்கைத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீரை செம்பரம்பாக்கம் ஏரி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரமாண்ட சுத்திகரிப்பு நிலையத்தை 19ம் தேதி நடைபெறும் விழாவில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.












Click it and Unblock the Notifications