விசாரிக்க வந்த பெண் எஸ்.ஐ.யின் காதைக் கடித்த பெண்!
சென்னை:விசாரணை நடத்த வந்த பெண் சப் இன்ஸ்பெக்டரின் காதைக் கடித்த பெண் கைது செய்யப்பட்டார்.
ஆந்திராவைச் சேர்ந்தவர் தேவி (29). இவர் நீலாங்கரையில் உள்ள மோகன் என்பவரின் வீட்டில் வீட்டு வேலை பார்த்து வந்தார். தேவியின் மகளுக்கு உடல் நிலை சரியில்லாததால், ஒரு நாள் விடுப்பு வேண்டும் என்று மோகனின் மனைவி லலிதாவிடம் கேட்டுள்ளார்.
ஆனால் விடுப்பு கொடுக்க லலிதா மறுத்துள்ளார். ஆனால் தேவி, வேலைக்கு வராமல் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
இந் நிலையில் தேவி வேலைக்கு வராததால் ஆத்திரமடைந்த லலிதா, தனது மகள் ஸ்ரீதேவியுடன் தேவி இருந்த பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு சாலையில் தேவி வருவதைப் பார்த்த லலிதாவும், அவரது மகளும் கோபத்துடன் அவரிடம் சென்று பொது இடம் என்று பார்க்காமல் சரமாரியாக தேவியை அடித்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்து வீட்டுக்குச் சென்று விட்டனர். பொது இடத்தில் ஒரு பெண்ணை இரு பெண்கள் அடிப்பதைப் பார்த்த சிலர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் ஆண்டாள், லலிதாவின் வீட்டுக்குச் சென்றார். அவரிடம் விசாரணை நடத்த முயன்றார். ஆனால் விசாரணைக்கு லலிதா ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. தொடர்ந்து ஆண்டாள் விசாரணை நடத்த முயன்றதால் ஆத்திரமடைந்த லலிதாவின் மகள் ஸ்ரீதேவி, ஆவேசத்துடன் கத்தியபடி ஆண்டாள் மீது பாய்ந்து அவரது காதைக் கடித்து விட்டார்.
வலியால் துடித்து அலறிய ஆண்டாளை சக போலீஸார் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதுதொடர்பாக ஆண்டாள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் ஸ்ரீதேவியைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications