காவல் நிலையத்தில் கட்டி புரண்ட காக்கிகள்
சென்னை: மாமூல் பணத்திற்காக காவல் நிலையத்திலேயே இரண்டு போலீசார் சண்டையிட்டு, கட்டி புரண்டனர்.
சென்னை ஆவடி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக சேது என்பவர் பணியாற்றி வருகிறார். சண்முகம் என்பவர் ஏட்டாக பணிபுரிகிறார்.
சேது அந்தப் பகுதிகளில் உள்ள கடைகளில் மாதந்தோறும் பணம் வசூலித்து, அந்த பணத்தை சக ஊழியர்களுக்கு பிரித்து கொடுப்பார்.
இந் நிலையில் இந்த மாதம் வசூலித்த மாமூலை பிரித்து கொடுத்துக் கொண்டிருக்கும்போது ஏட்டு சண்முகம் தனக்கு கொடுக்க வேண்டிய ரூ.100 கடன் பாக்கியை கேட்டுள்ளார்.
இதையடுத்து இருவருக்குமிடையே கடும் வாக்கு வாதம் நடந்தது. பின்னர் இது கைகலப்பாக மாறி இருவரும் கட்டி புரண்டு சண்டை போட்டனர்.
காவல் நிலையத்திற்குள்ளேயே இருவரும் அடித்து உருண்டனர். இைத வேடிக்கை பார்க்க பொதுமக்கள் கூடிவிட்டனர்.
சம்பவம் குறித்து அறிந்த துணை கமிஷ்னர் ஜோஷி நிர்மல் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். முதல் நிலை காவலர் சேது, ஏட்டு சண்முகம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். இருவர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க அவர் பரிந்துரைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications