அதிமுகவின் அந்தர் பல்டி: ஷெகாவத்துக்கு ஓட்டு-மதிமுகவும் வாக்களிப்பு
சென்னை:குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி ஆதரவு வேட்பாளர் பைரான் சிங் ஷெகாவத்தை ஆதரித்து அதிமுக எம்எல்ஏ, எம்பிக்கள் திடீரென வாக்களித்தனர்.
![]() |
அதிமுக வாக்களித்ததால் மதிமுக எம்எல்ஏ, எம்பிக்களும் ஷெகாவத்துக்கு வாக்களித்தனர். இதன்மூலம் மூன்றாவது அணி ஆரம்பத்திலேயே காலியாகிவிட்டது.
அவசரமாய் போன உத்தரவு:
கட்சியின் தேர்தல் புறக்கணிப்பு முடிவு காரணமாக வெளியூர்களுக்குச் சென்றிருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் அனைவரும் இன்று காலை சென்னையில் இருக்க வேண்டும் என போயஸ் தோட்டத்தில் இருந்து அவசர உத்தரவு பறந்தது.
இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் அடித்து பிடித்துக் கொண்டு சென்னை வந்து சேர்ந்தனர். அனைவரும் இன்று காலை சட்டசபை வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் (ஜெயலலிதா) அறையில் கூட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
அங்கு என்ன உத்தரவிடப்பட்டதோ வாக்குப் பதிவு தொடங்கி 2 மணி நேரம் ஆகிவிட்ட நிலையில் அதிமுக உறுப்பினர்கள் அணி அணியாக வாக்களிக்க வந்தனர். அவர்களுடன் 4 மதிமுக எம்.எல்.ஏக்களும் வந்தனர்.
அதிமுக மற்றும் மதிமுகவின் இந்த அதிரடி முடிவால் 3வது அணியில், ஆரம்பத்திலேயே பிளவு ஏற்பட்டு விட்டது.
சட்டசபையில் அதிமுகவுக்கு 60 எம்.எல்.ஏக்களும் மதிமுகவுக்கு 6 எம்எல்ஏக்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் அதிமுக எம்பிக்கள் ஓட்டு:
அதே போல அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் டெல்லியில் இன்று வாக்களித்தனர். அவர்களுடன் மதிமுக எம்பிக்களும் டெல்லியில் வாக்களித்தனர்.
ஏஜென்ட் சக்ரபாணி-சிபிராதாகிருஷ்ணன்:
சட்டசபை கூட்ட அரங்கில் வாக்குப் பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதீபா பாட்டீலின் ஏஜென்ட்டாக திமுக எம்.எல்.ஏ சக்ரபாணியும், ஷெகாவத்தின் ஏஜென்ட்டாக சி.பி.ராதாகிருஷ்ணனும் செயல்பட்டனர்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், பாமக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களும் ஓட்டுப் போட்டனர்.
சென்னையில் வாக்களித்த எம்பிக்கள்:
தமிழ்நாட்டில் சட்டசபை வளாகத்தில் ஓட்டுப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடந்தது.
மத்திய அமைச்சர் வயலார் ரவி, தொழிலதிபரும், ராஜ்யசபா உறுப்பினருமான எம்.ஏ.எம்.ராமசாமி, லோக்சபா எம்.பிக்கள் கார்வேந்தன், ராணி, எல்.கணேசன், தனுஷ்கோடி ஆதித்தன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் சென்னையில் வாக்களித்தனர்.
ஜெ வரவில்லை:
தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏக்களில் 230 பேர் ஓட்டுப் போட்டனர்.
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மதியம் வரையில் வாக்களிக்க வரவில்லை.
அதே போல சி.வி.சணமுகம் (அதிமுக), மதிமுக உறுப்பினர்கள் கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோரும் வாக்களிக்கவில்லை
நரேஷ் குப்தா:
வாக்குப் பதிவு அறையில் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, தேர்தல் பார்வையாளர் ஸ்ரீவத்சவா, உதவி தேர்தல் அதிகாரி செல்வராஜ் ஆகியோர் அமர்ந்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக்காலம் வருகிற 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து இன்று குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - இடது சாரிகள் சார்பில் பிரதீபா பாட்டீலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பைரான் சிங் ஷெகாவத்தும் போட்டியிடுகின்றனர். இரு வேட்பாளர்களும் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று வாக்கு சேகரித்தனர்.
இதுவரை இல்லாத அளவுக்கு பிரதீபா பாட்டீல் மீது சரமாரியாக புகார்கள் கூறப்பட்டன. பெரும் விமர்சனங்களையும் அவர் சந்தித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை வளாகங்களில் ஓட்டுப் போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எம்பிக்கள் பச்சை-எம்எல்ஏக்கள் சிவப்பு:
நாடு முழுவதும் இன்று காலை 10 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். எம்.பிக்கள் வாக்களிக்க பச்சை நிற வாக்குச் சீட்டும், எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க இளஞ்சிவப்பு நிற வாக்குச் சீட்டும் பயன்படுத்தப்படுகிறது.
மன்மோகன், சோனியா:
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் டெல்லியில் இன்று காலை ஓட்டுப் போட்டனர்.
கருணாநிதி முதல் ஓட்டு:
முதல்வர் கருணாநிதி சென்னையில் முதல் நபராக ஓட்டுப் போட்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள், திமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
புதுவையில் தேர்தல் முடிந்தது:
புதுச்சேரியில் இன்று பிற்பகல் 12 மணியுடன் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிந்தது.
புதுச்சேரியில் உள்ள 30 எம்.எல்.ஏக்களும் 12 மணியுடன் ஓட்டுப் போட்டு முடித்து விட்டதால் தேர்தல் முடிவடைந்தது. ஒரே ஒரு லோக்சபா எம்.பியான பாமகவின் ராமதாஸும் புதுவையிலேயே ஓட்டளித்தார். இருப்பினும் காங்கிரஸைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. நாராயணசாமி டெல்லியில் ஓட்டுப் போட்டார்.
12 மணிக்குள் அனைவரும் ஓட்டுப் போட்டு விட்டாலும் கூட வாக்குச் சாவடி குறிப்பிட்ட நேரமான 5 மணி வரை திறந்திருக்கும். நாளை வாக்குப் பெட்டி டெல்லிக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
சனிக்கிழமை வாக்கு எண்ணிக்கை:
தேர்தல் முடிந்ததும், வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் டெல்லிக்குக் கொண்டு செல்லப்படும். நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கும். பின்னர் சனிக்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
இந்தத் தேர்தலில் மொத்தம் 4,895 வாக்காளர்கள் (எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்) உள்ளனர். ஒரு எம்.பியின் வாக்கு மதிப்பு 708 ஆகும். ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசப்படும்.
எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களின் வாக்கு மதிப்பு மொத்தம் 10 லட்சத்து 98 ஆயிரத்து 882 ஆகும்.













Click it and Unblock the Notifications