கோவைக்கு பட்டுக் கம்பளம் விரிக்கும் சில்க் ஏர்
டெல்லி:சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் துணை நிறுவனமான சில்க் ஏர் நிறுவனம், சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு அக்டோபர் மாதம் முதல் வாரம் மூன்று முறை விமான சேவையை தொடங்கவுள்ளது.
கோவை மாநகரம், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற பெருமையைப் பெற்றது. ஏராளமான ஜவுளி ஆலைகள், பொறியியல் நிறுவனங்கள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களைக் கொண்ட, தமிழகத்தின் முக்கிய பொருளாதார கேந்திரமாக திகழ்கிறது கோவை.
இந் நிலையில் கோவைக்குப் புதிய பெருமையாக இங்கிருந்து நேரடியாக சிங்கப்பூருக்கு விமான சேவை கிடைக்கவுள்ளது. சில்க் ஏர் நிறுவனம் தனது சேவையை கோவைக்கு விரிவுபடுத்தியுள்ளது.
அக்டோபர் மாதம் முதல் இந்தப் புதிய விமான சேவை தொடங்குகிறது. வாரம் 3 முறை சிங்கப்பூர் - கோவைக்கு விமான சேவை இயக்கப்படும்.
தென்னிந்தியாவில் சில்க் ஏர் கால் பதிக்கும் மூன்றாவது நகரம் கோவை. இதற்கு முன்பு திருவனந்தபுரம், கொச்சி ஆகிய நகரங்களில் சில்க் ஏர் தனது சேவையை மேற்கொண்டுள்ளது.
இதுதவிர காத்மாண்டு நகருக்கு இந்த ஆண்டு கடைசியில் விமான சேவையை மேற்கொள்ளவுள்ளது சில்க் ஏர். இந்த சேவையும் வாரம் மூன்று முறை இயக்கப்படும்.
மேலும், தற்போது இயக்கி வரும் விமான சேவையை விரிவுபடுத்தவும் திட்டம் வைத்துள்ளது சில்க் ஏர். அக்டோபர் 28ம் தேதி முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வருகிறது. அதன்படி, திருவனந்தபுரம், யாங்கோன் (பர்மா தலைநகர் ரங்கூன்), சியாம் ரீப், புக்கெட், லங்காவி, கோட கினபாலு ஆகிய ஊர்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படும்.
வாரத்திற்கு 400க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்க சில்க் ஏர் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இது 15 சதவீதம் அதிகமாகும்.
புதிய வழித் தடங்கள் மூலம் 29 நகரங்களில் 11 நாடுகளில் தனது சேவையை விரிவுபடுத்துகிறது சில்க் ஏர். சில்க் ஏர் நிறுவனத்திடம் தற்போது 11, ஏ320 ரக ஏர்பஸ் விமானங்கள் உள்ளன. இதே ரகத்திலான மேலும் 11 விமானங்களை வாங்கும் திட்டமும் சில்க் ஏர் நிறுவனத்திடம் உள்ளது.












Click it and Unblock the Notifications