டாக்டர் சீட்டை உதறிய 19 மாணவர்கள்:பொறியியல் படிப்புக்குத் தாவினர்
சென்னை:எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இடம் கிடைத்தும் அனுமதிக்கப்பட்ட 19 மாணவ, மாணவிகள் அதை உதறி விட்டு பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
முன்பெல்லாம் டாக்டராவது தான் மிகப் பெரிய சாதனையாகவும், பணம் ஈட்டும் வழியாகவும் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் நிலைமை தலைகீழாகிவிட்டது.
கம்ப்யூட்டர் பொறியியல் படித்தால் தான் நல்ல எதிர்காலம் என்ற நிலை உருவாகிவிட்டது. இதனால் வசதி இருக்கிறதோ இல்லையோ, அரசு கல்லூரியில் சீட் கிடைக்கிறதோ இல்லையோ, எப்பாடுபட்டாவது தனியார் பொறியியல் கல்லூரியிலாவது குழந்தைகளை சேர்த்துவிட்டு படிக்க வைத்துவிடுகின்றன பல குடும்பங்கள்.
இதற்கு கைமேல் பலனும் கிடைத்துவிடுகிறது. நன்றாக படித்து பெர்பார்ம் செய்தால் கேம்பஸிலேயே வேலை தேடி வந்துவிடுகிறது. இல்லாவிட்டாலும் கொஞ்சம் திறமை இருந்தாலும் வேலை நிச்சயம் என்ற நிலை உள்ளது.
இதனால் எம்பிபிஎஸ் மீதான கிரேஸ் எல்லாம் போயே போய்விட்டது. ரூ. 40 லட்சம் முதல் ரூ. 80 லட்சம் வரை கொடுத்து டாக்டர் சீட் வாங்கிய காலம் எல்லாம் இருந்தது.
இப்போது கிடைத்த எம்பிபிஎஸ் சீட்டையே வேண்டாம் என்று கூறிவிட்டு பி.இ. படிப்பில் சேர ஆரம்பித்துவிட்டனர் விவரமான மாணவர்கள்.
தமிழகத்தில் பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கவுன்சிலிங் நேற்று தொடங்கியது. முதல் நாளில் 2000 மாணவ, மாணவியர் கவுன்சிலிங்குக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் மருத்துவப் படிப்பில் சேர அனுமதி கிடைத்த 19 மாணவ, மாணவியரும் அடக்கம்.
கஸ்தூரி, நவீன்குமார் ஆகிய இருவருக்கும் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த சீட்டே வேண்டாம் என்று கூறிவிட்டு இருவரும் பொறியியல் கல்லூரியில் சேர விருப்பம் தெரிவித்தனர்.
இதையடுத்து இருவருக்கும் கிண்டி பொறியியல் கல்லூரியில் பி.இ. இசிஇ படிப்பில் சீட் ஒதுக்கப்பட்டது.
இதேபோல கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த அஜீத் என்ற மாணவர், அந்த சீட்டை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
அவர் விரும்பி தேர்வு செய்தது அண்ணா பல்கலைக்கழகத்தின் குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பி.இ. ஏரோநாட்டிக்கல் பொறியியல் படிப்பு.
மருத்துவப் படிப்பை விட்டு விட்டு பி.இ. படிப்புக்குத் தாவியதற்கு மாணவர்கள் பல காரணங்களைச் சொல்கிறார்கள். எம்.பி.பி.எஸ். மட்டும் படித்தால் போதாது. கூடவே எம்.டி, எம்.எஸ் என மேல் படிப்பு படிக்க வேண்டும். இவற்றைப் படித்து முடிப்பதற்குள் பல லட்சத்தை செலவிட வேண்டும்.
ஆனால் பி.இ. என்பது அப்படி அல்ல. நான்கு வருடப் படிப்பு, படித்து முடிப்பதற்குள் பெரிய நிறுவனங்களில் கை நிறைய சம்பளத்துடன் வேலை. தேவையானால் மேல் படிப்புப் படித்துக் கொள்ளலாம் என்ற பிராக்டிகல் அம்சங்கள் காரணமாக எம்.பி.பி.எஸ். சீட்டை விட்டு விட்டு பி.இக்குகத் தாவியதாக இந்த மாணவ, மாணவியர் கூறினர்.
இந்த கால இளசுகள் அதி புத்திசாலிகள்...!












Click it and Unblock the Notifications