டீ சாப்பிடலாம் வாங்க - 3வது அணிவேட்பாளரின் வித்தியாச அழைப்பு!
டெல்லி:துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் முகம்மது ஹமீத் அன்சாரி, பாஜக கூட்டணி வேட்பாளர் நஜ்மா ஹெப்துல்லா ஆகியோரை தேநீர் விருந்துக்கு அழைத்துள்ளார் 3வது அணியின் வேட்பாளரான ரஷீத் மசூத்.
குடியரசு ஜனாதிபதி பதவிக்கு மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் அன்சாரிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இந் நிலையில் 3வது அணி வேட்பாளரான ரஷீத் மசூத் வித்தியாசமான ஒரு அழைப்பை விடுத்துள்ளார்.
நஜ்மாவுக்கும், அன்சாரிக்கும் அவர் ஒரு அழைப்பை விடுத்துள்ளார். அதில், குடியரசுத் தலைவர் தேர்தலில் தனிப்பட்ட தாக்குதலும், சேற்றை வாரி வீசுவதும் சரமாரியாக மேற்கொள்ளப்பட்டன.
எதிர்காலத்தில் இதுபோன்ற மரியாதைக் குறைவான பிரசாரம் இடம் பெறக் கூடாது. அதை நாம் வலியுறுத்த வேண்டும். எனவே நாம் மூவரும் ஏதாவது ஒரு தேநீர் விருந்திலோ அல்லது மதிய விருந்திலோ அல்லது இரவு விருந்திலோ சந்தித்துப் பேசலாம்.
சுழற்சி முறையில் 3 நிகழ்ச்சிகளும் நாம் பங்கேற்போம். இதன் மூலம் நமக்குள் எந்தவிதமான கசப்புணர்வும் இல்லை என்பதை வெளிப்படுத்துவோம். தேச நலனுக்காக நாம் உட்கார்ந்து பேசுவது அவசியம் என்று கூறியுள்ளார் மசூத்.
டீ சாப்பிடலாம் வாங்க என்று மசூத் விடுத்துள்ள அழைப்பை அன்சாரியும், நஜ்மாவும் ஏற்பார்களா என்பதுதான் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications