இன்று விடை பெறுகிறார் மக்கள் ஜனாதிபதிஅப்துல் கலாம்-நாளை சென்னை வருகிறார்
டெல்லி:மக்கள் ஜனாதிபதி என்ற பெருமையுடன், குடியரசுத் தலைவர் பதவியை வெற்றிகரமாக முடித்து விட்டு இன்றுடன் ஓய்வு பெறுகிறார் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இதையொட்டி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த பிரிவுபசார விழாவில் எம்.பிக்களுக்கு அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
கலாம் ஓய்வு பெறுவதையொட்டி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரிவுபசார விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்ச்சியில், சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பல்வேறு கட்சித் தலைவர்கள், எம்.பிக்கள், முன்னாள் எம்.பிக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
![]() |
நிகழ்ச்சியில் சுமார் அரை மணி நேரம் கலாம் உரை நிகழ்த்தினார். அவரது பேச்சை எம்.பிக்களும், தலைவர்களும் மிகவும் உன்னிப்பாக கேட்டனர்.
கலாம் பேசுகையில், 21வது நூற்றாண்டின் உதயத்தில், நமது நாட்டு நாடாளுமன்றமும், பிற ஜனநாயக அமைப்புகளும் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றன. இவற்றிலிருந்து வெற்றிகரமாக மீள நாம் இணைந்து பாடுபட வேண்டும்.
2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசு நாடாக உருவெடுக்க எம்.பிக்கள் உறுதி பூண வேண்டும். அந்த லட்சியத்துடன் உழைக்க வேண்டும். முதன் முதலாக அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டபோது நமது தலைவர்கள் எப்படி உத்வேகத்தோடும், தீவிர கவனத்துடனும், அக்கறையுடனும் உழைத்தார்களோ அதேபோன்ற விவேகத்துடன் நமது எம்.பிக்கள் உழைக்க வேண்டும்.
2020ல் நாம் வல்லரசு நாடாக வேண்டும். 2030ல் மின்சாரப் பற்றாக்குறை இல்லாத நாடாக உருவெடுக்க வேண்டும் என்றார் கலாம்.
இந்தியில் நமஸ்கார் என்று ஆரம்பித்து தனது பேச்சைத் தொடங்கிய கலாம் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் மிக எளிமையாக பேசினார்.
அதே நேரத்தில் மிக உணர்ச்சிகரமாக அமைந்த அவரது உரையை அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் கவனித்தனர்.
தனது பேச்சின்போது, புதிய குடியரசுத் தலைவராக தேர்வாகியுள்ள பிரதீபா பாட்டீலுக்கு வாழ்த்துக்களைச் சொன்னார் கலாம். அதேபோல துணை குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ள பைரான் சிங் ஷெகாவத்திற்கும் புகழாரம் சூட்டினார் கலாம்.
ஷெகாவத் மிகப் பெரிய அரசியல் அனுபவஸ்தர். அவரைப் போல தேர்ந்த ஒருவருடன் இணைந்து பணியாற்றியதில் பெருமையடைகிறேன் என்றார் கலாம்.
நாளை புதிய வீட்டில் குடியேறுகிறார்:
நாளை ஜனாதிபதி இல்லத்தில் இருந்து கிளம்பும் கலாம், டெல்லி கன்டொன்மெண்ட் பகுதியில் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 பெட்ரூம் கொண்ட வீட்டில் குடியேறுகிறார்.
2 சூட்கேஸ்கள் தான் சொத்து:
ஜனாதிபதி மாளிகையில் இருந்து கிளம்பும் கலாம் தன்னுடன் கொண்டு செல்லப் போவது வெறும் 2 சூட்கேஸ்கள் தான். தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்கள் தவிர அவருக்கு பெரிய சொத்துக்கள் ஏதும் இல்லை.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து ஜனாதிபதி ஆகி டெல்லிக்குப் போன போதும் அவர் கொண்டு போனது இரண்டு சூட்கேஸ்கள் தான்.
அதைத் தொடர்ந்து அவரது புத்தகங்கள் அடங்கிய பெட்டிகள் போயின. இப்போதும் தனது இரு சூட்கேஸ்களுடன் புத்தகங்களைத் தான் உடன் எடுத்துச் செல்கிறார் கலாம்.
இன்று இரவு டிவி, ரேடியோவில் உரை:
இந் நிலையில் இன்றிரவு 7 மணி முதல் 8 மணி வரை தொலைக்காட்சியும் ரேடியோவிலும் மக்களுக்கு நேரடியாக உரையாற்றவுள்ளார் கலாம்.
இந்த உரை மாநில மொழிகளில் இரவு 9.30க்கு ஒளிபரப்பாகிறது.
நாளையே சென்னை வருகிறார்:
நாளை தனது புதிய வீட்டில் குடியேறும் கலாம் (வீட்டையே நாளை தான் பார்க்கப் போகிறார்) இரவே சென்னை புறப்பட்டு வருகிறார்.
நாளை மறுதினம் முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில் தனது பேராசிரியர் பணியை தொடங்கப் போகிறார்.













Click it and Unblock the Notifications