அதிமுகவிலிருந்து விழுந்த வாக்குகள்- திசைமாறியஅந்த 4 பேர் யார்?-ஜெவுக்கு கருணாநிதி கேள்வி
சென்னை:நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவில் இருந்து 4 எம்எல்ஏக்கள் வாக்குகளை திசைமாறி போட்டது யார்? யார்? என முதல்வர் கருணாநிதி ஜெயலலிதாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி: அரசாங்கப் பணியில் நீங்கள் கவனம் செலுத்தவில்லை என்பது போன்ற குற்றச்சாட்டை ஜெயலலிதா தெரிவித்திருக்கிறாரே?
பதில்: அரசியல்வாதிகள் தங்கள் பெயரால் ஒரு அறிக்கையை வெளியிடும்போது அந்த அறிக்கையிலே உள்ள வாசகங்களை ஒரு முறை தாங்களே படித்து கொள்ள வேண்டும். தாங்கள் ஒரு வாதத்தை வைக்கும்போது, எதிர்தரப்பினர் அதற்கு என்ன பதில் வாதம் வைப்பார்கள் என்பதையும் எண்ணிப் பார்த்துவிட்டுத் தான் அறிக்கையை வெளியிட வேண்டும்.
அன்றாடம் காலையில், தலைமைச் செயலகத்தில் அரசுப் பணிகளை ஆற்றுவதோடு கடந்த 10 நாட்களாக தொடர்ந்து அரசின் முக்கிய துறைகளை பற்றிய ஆய்வினை தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர், துறையின் அமைச்சர், செயலாளர், அதிகாரிகளைக் கொண்டு 4 மணி நேரத்திற்கு மேல் செலவிட்டு நடத்தி வருகிறேன்.
நிதிநிலை அறிக்கையிலே தெரிவிக்கப்பட்ட அறிவிப்புகளுக்கெல்லாம் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு விட்டனவா என்று துறை வாரியாகக் கேட்டு தாமதம் இருக்குமானால் அதை போக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறேன். நிதிநிலை அறிக்கையிலே ஒதுக்கப்பட்ட பணத்திற்காக வேலைகள் எல்லாம் தொடங்கப்பட்டு விட்டனவா என்று கேட்டறிந்து அது பற்றிய விளக்கங்களையும் கேட்டு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறோம்.
இதைப்பற்றி விரிவான செய்திகள் புகைப்படத்தோடு நாளேடுகளில் வெளிவந்து கொண்டும் இருக்கின்றன. இவ்வளவிற்கும் பிறகு அரசாங்கப் பணியில் கவனமே செலுத்தவில்லை என்று அம்மையார் குற்றஞ்சாட்டுகிறார்.
ஜெயலலிதா ஆட்சியில் இருந்த காலத்திலே அவர் தலைமைச் செயலகத்திற்கு வருவதே ஒரு அதிசய செய்தி. வந்தால் தானே ஆய்வு. ஆனால், என்னைப் பொறுத்த வரையில் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட காலை, மாலை நேரங்களில் கூட தலைமைச் செயலகம் சென்று அரசாங்கப் பணிகளை ஆர்றிக் கொண்டு தான் உள்ளேன். எனவே, ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு என்பது கோட்டான் குயிலைப் பார்த்து பழிப்பதைப் போலத்தான்.
கேள்வி: நீங்கள் உங்கள் அறிக்கையில் பெயரைக் குறிப்பிடாமல் கவிதை எழுதியிருப்பதாகவும், பெயரைக் குறிப்பிட்டிருந்தால் சட்டரீதியாக சந்திப்பேன் என்றும் ஜெயலலிதா சொல்கிறாரே?
பதில்: நான் பெயரைக் குறிப்பிடவில்லை என்று அவரே அறிக்கையில் சொல்ல்யிருக்கும் போது, எதற்காக அவரைப்பற்றி நான் எழுதியதாக எடுத்துக் கொண்டு, என் மீது ஏன் அம்மையார் பாய்ந்து விழுகிறார் நான் யாருடைய பெயரையும் எழுதவில்லையே, எதற்காக இவருக்கு மட்டும் கோபம் வரவேண்டும். குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது என்பார்களே. அது இது தானோ
கேள்வி: தங்கள் கவிதையை ஒரு பிரபலமான நாளிதழ் வெளியிட்டிருப்பதாகவும் அது நல்ல பத்திரிக்கைக்கு அழகல்ல என்றும் அந்த பத்திரிக்கை மீதும் ஜெயலலிதா கணை தொடுத்திருக்கிறாரே?
பதில்: அம்மையார் எழுதினால், அது எவ்வளவு ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் இருந்தாலும் பத்திரிக்கைகள் வெளியிட வேண்டும். அப்படி வெளியிட்டால் அது நல்ல பத்திரிக்கை. அம்மையாரின் செயல்பாடுகளை பற்றி குறை கூறுகின்ற செய்திகளை வெளியிட்டால், அப்போதே அந்த பத்திரிக்கை நல்ல பத்திரிக்கை என்ற பட்டியலில் இருந்து உடனே மாறிவிடும் போலும்.
கேள்வி: அதிமுகவைப் பற்றியும், அதன் தொண்டர்களைப் பற்றியும் விமர்சனம் செய்வதற்கு உங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது என்ற ஜெயலலிதாவின் கூற்றுக்கு உங்கள் பதில்....
பதில்: தற்போது அதிமுக பற்றியோ, அதன் தொண்டர்கள் பற்றியோ நான் எதுவும் சொல்லவில்லை, நான் எழுதியது குறை கூறியது அனைத்தும் அந்த கட்சியின் தலைவியைப் பற்றித்தான். அதற்கு நேரடியாக பதில் சொல்ல முடியாமல் அவருடைய கட்சியைப் பற்றி நான் விமர்சனம் செய்வதாக மாற்றிக் கூறுகிறார்.
தற்போது மற்ற ஏடுகளில் எல்லாம் வெளிவரும் செய்திகளைப் பார்க்கும் போது, அந்த அம்மையாரை நான் விமர்சனம் செய்வதை விட, அவருடைய கட்சித் தொண்டர்களே விமர்சனம் செய்து கொணடிருக்கிறார்கள். அதற்கு முதலில் அந்த அம்மையார் பதில் கூறிவிட்டு பிறகு என் பக்கம் திரும்பட்டும்.
அவருடைய கருத்துக்கு எந்த அளவுக்கு அவருடைய கட்சிக்காரர்களே துணையாக இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் தான், ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவிலிருந்து விழுந்த 4 பேரின் வாக்குகள் யார் என்பதை கண்டறிய வக்கற்றுப் போய், திமுக மீதும் என் மீதும் அம்மையார் பாய்வதில் எந்தவிதமான பொருளும் கிடையாது.
கேள்வி: கழுத்து வெளுத்தாலும் காகம், கருடன் ஆக முடியாது என்ற ஜெயலலிதாவின் பழமொழி குறித்து...
பதில்: ஆமாம், கழுத்து வெளுத்தாலும் காகம், கருடன் ஆக முடியாது. அதைப் போலவே ஜெயலலிதா இனி என்னதான் கூறினாலும் அவரைப் பற்றியும் அவருடைய செயலைப் பற்றியும் அவரைக்கண்ட மூன்றாவது அணியினருக்கு அவர்பால் விழுந்து விட்ட எண்ணத்தை மாற்ற முடியாது. ஜெயலலிதாவை திருத்த முடியாது என்பது நமக்கு தெரியும். தற்போது அவர்களும் புரிந்து கொண்டிருப்பார்கள்.
கேள்வி: ஜெயலலிதா விடுத்துள்ள அவ்வளவு நீண்ட அறிக்கையில் உங்களை சரமாரியாக தாக்கியிருக்கிறாரே தவிர, நீங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஒரு பதிலும் சொல்லவில்லையே?
பதில்: நேரடியாக பதில் சொல்ல முடியாத காரணத்தினால் தானே என் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் தொடுத்துள்ளார். சட்டியில் உள்ளது தானே அகப்பையில் வரும்.
கேள்வி: பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த தமிழக அரசைப் பற்றி பல்வேறு விமர்சனங்களைச் செய்து வந்த போதிலும், குறிப்பாக உயர் கல்வித் துறையைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்ய என்ன காரணம்?
பதில்: அந்த துறையின் அமைச்சர் (பொன்முடி) அவருடைய (ராமதாசின்) மாவட்டம் அல்லவா. அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற "பாசத்தோடுதான்" டாக்டர் ராமதாஸ் ஐயா அந்த கருத்துக்களை தெரிவித்திருக்கக் கூடும். ஆனால் ஒன்று, எதற்கும் ஓர் எல்லையும் அளவும் வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications