ராஜகோபால் வழக்கு: ஜீவஜோதி அடித்த பலே பல்டி!
நாகப்பட்டினம்:சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் என்னைத் தாக்கியதாக கூறப்படுவது குறித்து நான் புகார் கொடுக்கவே இல்லை. அப்போது என்ன நடந்தது என்றும் எனக்குத் தெரியாது. எனக்கு எல்லாமே மறந்து போய் விட்டது என்று நாகை நீதிமன்றத்தில் ஜீவஜோதி பிறழ் சாட்சியம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வேளச்சேரியில் தனது காதல் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாருடன் வசித்து வந்தவர் ஜீவஜோதி. இவரது சொந்த ஊர் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாக்குடி ஆகும்.
சரவண பவன் ராஜகோபால் அனுப்பிய அடியாட்களால் பிரின்ஸ் சாந்தகுமார் கடத்திச் செல்லப்பட்டு கொடைக்கானலில் வைத்துக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக ராஜகோபால் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தனது சொந்த ஊருக்குப் போய் விட்டார் ஜீவஜோதி. அந்த சமயத்தில், கடந்த 2003ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி ராஜகோபால் மற்றும் அவருடன் வந்தவர்கள் தனது வீட்டுக்கு வந்து கொலை செய்ய முயற்சித்ததாக வேதாரண்யம் போலீஸில் புகார் கொடுத்தார் ஜீவஜோதி.
இந்த வழக்கில் ராஜகோபால், அவரது வக்கீல் ராஜேந்திரன், சுப்ரமணியன், கார்த்தீசன், ஜனகராஜன் உள்லிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை கொலை முயற்சி வழக்காக விசாரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த 4ம் தேதி நாகை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பின்னர் 6ம் தேதி குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது.
ராஜகோபால் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களும், ஜீவஜோதி உள்ளிட்ட 8 சாட்சிகளும் நேற்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி ராஜகோபால், ஜீவஜோதி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஜீவஜோதியுடன் அவரது தந்தை ராமசாமி, தாயார் தவமணி, தம்பி ராம்குமார் உள்ளிட்டோர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
முதலில் ஜீவஜோதியிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். அப்போது நான் ராஜகோபால் உள்ளிட்டோர் மீது புகார் ஏதும் கொடுக்கவில்லை. சம்பவம் நடந்து நான்கு ஆண்டுளாகி விட்டதால் என்ன நடந்தது என்ற எனக்குத் தெரியவில்லை. எல்லாம் மறந்து போய் விட்டது. போலீஸ் புகாரில் எனது கையெழுத்து மட்டும் உள்ளது என்றார்.
என்ன நடந்தது என்றே தெரியவில்லை என்று ஜீவஜோதி பல்டி அடித்ததால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது. அவரது தந்தை, தாய், தம்பி உள்ளிட்ட மற்ற சாட்சிகளும் இதேபோல என்ன நடந்துத என்று தெரியவில்லை என்று பிறழ் சாட்சியம் அளித்தனர்.
இந் நிலையில் ஜீவஜோதியின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கோர்ட்டுக்கு வெளியே சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. ஆனால் இந்தக் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இன்று ஜீவஜோதிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் காவல்துறையினரிடம் விசாரணை நடைபெறும் என நீதிபதி அறிவித்தார்.
கோர்ட்டுக்கு உறவினர்கள் புடை சூழ வந்திருந்த ஜீவஜோதி கர்ப்பமாக இருந்தார். ஜீவஜோதி மற்றும் அவரது தரப்பினரின் பல்டியால் இந்த வழக்கின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
பள்ளிக்காலத்தில் உடன் படித்த தண்டபாணி என்பவரை ஜீவஜோதி கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications