20 சுய நிதி கல்லூரிகளில் அதிரடி சோதனை
சென்னை:தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும், இதைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சமீபத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார்.
உரிய ஆதாரங்கள் இருந்தால் இந்தக் கல்லூரிகள் மீது நடவடிக்கைக எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதியும், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் அதற்குப் பதிலளித்திருந்தனர்.
இந் நிலையில் இன்று காலை செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் சென்னை மருத்துவக் கல்லூரி டீன் கலாநிதி தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர்.
இதேபோல ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட சுயநிதிக் கல்லூரிகளில் சோதனை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தபால் மூலமும், இ-மெயில்கள் மூலமும் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று சென்னை அருகே உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட 2 சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications