2020ல் இந்தியா வல்லரசாகும்: அப்துல் கலாம்இன்று சென்னை வருகிறார்
டெல்லி
குடியரசுத் தலைவர் பதவியை வெற்றிகரமாக முடித்து விட்டு, பதவியிலிருந்து ஓய்வு பெற்றார் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசு நாடாக திகழும் என நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தியபோது நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.
மக்கள் ஜனாதிபதி என்ற பெருமையுடன் நேற்று மாலை தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றார் அப்துல் கலாம். இதையடுத்து இன்று பிற்பகல் புதிய குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
![]() |
அதன் பின்னர் அரசு முறைப்படி அவருக்கு பிரியாவிடை கொடுக்கப்படுகிறது. இதையடுத்து இன்று இரவு 7.50 மணிக்கு கலாம் சென்னை வருகிறார். நாளை அண்ணா பல்கலைக்கழகத்தில் கெளரவப் பேராசிரியராக பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.
முன்னதாக அவர் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்தினார்.
அவர் கூறியதாவது:
2020ம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக, வல்லரசு நாடாக திகழும். நம்முடைய இளைஞர்களின் துணையுடன், திறமையான, வெளிப்படையான நிர்வாகமும், அப்பழுக்கற்ற, ஊழலற்ற ஆட்சியும் இருந்தால் நிச்சயம் நாம் 2020ம் ஆண்டில் வல்லசு நாடாக மாறி விடுவோம்.
நாட்டில் உள்ள 25 வயதுக்குட்பட்ட 54 கோடி பேரையும் ஊக்கப்படுத்தி உத்வேகத்துடன் அவர்களை சரியான பாதையில் நடைபோட வைக்க வேண்டும். அவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும். அவர்களுடைய ஆளுமைத் திறனை மேம்படுத்த வேண்டும்.
இளைஞர்கள்தான் இந்த உலகின் மாபெரும் சக்தி. வளர்ந்த, வல்லரசு இந்தியாவில் நகர்ப்புற, கிராமப்புற வித்தியாசம் மிகவும் குறைவாக இருக்கும். மின்சாரமும், தரமான குடிநீரும் அனைவருக்கும் கிடைக்கும். விவசாயம், தொழில்துறை, சேவைத் துறை இணைந்து செயல்படும். கல்விக்கு சிறந்த முக்கியத்துவம் அளிக்கப்படும். வாழ்க்கைக்குத் தேவையான கல்வி கற்பிக்க வசதி கிடைக்கும்.
கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகளுக்கு ஏற்ற நாடாக இந்தியா விளங்கும். உலகிலேயே சிறந்த மருத்துவ வசதிகள் வளர்ந்த இந்தியாவில் அபரிமிதமாக இருக்கும். அரசு நிர்வாகம் பொறுப்பானதாக, வெளிப்படையானதாக, ஊழலற்றதாக இருக்கும். வறுமை அறவே ஒழிந்திருக்கும். கல்லாமை இல்லை என்ற நிலையில் இருக்கும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் அறவே இல்லாதிருக்கும். சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கும். புறக்கணிப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
இப்படிப்பட்ட ஒரு வளர்ந்த, வல்லரசு நாடாக இந்தியா நிச்சயம் மாறும். மிகச் சிறந்த திறமை வாய்ந்த அரசு நிர்வாகம் உள்ள நாடாக, அமைதியான நாடாக, அனைவரும் வசிக்க ஆசைப்படும் அழகிய நாடாக நமது இந்தியா நிச்சயம் மாறும்.
நமது நாட்டில் இரண்டாவது பசுமைப் புரட்சி வர வேண்டும். தங்களது வளமான நிலங்களைப் பாதுகாக்க விவசாயிகளுக்கு முழு சுதந்திரமும், சக்தியும் கொடுக்க வேண்டும். விவசாய நிலங்கள் பாழ்பட்டுப் போக அனுமதிக்கக் கூடாது.
விவசாயிகளும், விவசாய விஞ்ஞானிகளும், தொழிற்சாலைகளும் இணைந்து சீரிய முறையில் உழைத்தால், நமது விவசாய பொருளாதார வளர்ச்சியை ஆண்டுக்கு 4 சதவீதம் அதிகரிக்க முடியும் என்றார் கலாம்.
தனது பேச்சின்போது உலகின் மிகவும் உயர்ந்த போர்க்களம் எனக் கூறப்படும் சியாச்சின் பனிமலைக்குச் சென்றது, சுகோய் போர் விமானத்தில் பறந்தது, நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்தது ஆகிய சுவையான சம்பவங்களையும் நினைவு கூர்ந்து பேசினார் கலாம்.
நமது நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள முப்படையினருக்கும் அவர் வீர வணக்கம் செலுத்தினார். அவர்களது தியாக உணர்வுடன் கூடிய பணிகளைப் பாராட்டினார்.
மேலும் தனது கனவுத் திட்டமான ஆப்பிரிக்க இ-நெட்வொர்க் திட்டம் (செயற்கைக்கோள் மூலம் கல்வி வழங்குவது) குறித்தும் கலாம் பெருமையுடன் குறிப்பிட்டார். 100 மில்லியன் டாலர் செலவிலான இந்தத் திட்டத்திற்கு சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள 53 நாடுகளின் சமூக நிலை பெரும் மாறுதலைப் பெறும் என்றார் கலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியாவைச் சேர்ந்த ஏழு பல்கலைக்கழகங்கள், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஐந்து பல்கலைக்கழகங்கள், இந்தியாவைச் சேர்ந்த 12 சூப்பர் ஸ்பெஷிலிட்டி மருத்துவமனைகள் மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 5 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், 53 டெலி மெடிசின் மையங்கள், 53 டெலி கல்வி மையங்கள் இணைக்கப்படும்.
இதுதொடர்பான முன்னோடித் திட்டம் ஏற்கனவே எத்தியோப்பியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் முக்கிய அம்சமாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள 53 நாடுகளின் தலைவர்களும் இ-நெட்வொர்க் மூலம் இணைக்கப்படுவார்கள்.
இந்தியா 2020ல் நிச்சயம் வல்லரசாகும், வளர்ந்த நாடாக இந்தியா பெருமித நடைபோடும் என்ற நம்பிக்கை வார்த்தைகளுடன் நாட்டு மக்களிடமிருந்து பிரியா விடை பெற்றார் அப்துல் கலாம்.
டெல்லியில் வீடு தயாராகவில்லை:
ஜனாதிபதி பதவியிலிருந்து ஒய்வு பெறும் கலாமுக்காக மத்திய அரசு டெல்லியில் ஒதுக்கப்பட்ட பங்களாவை சீரமைக்கும் பணிகள் முடியவில்லை.
இதையடுத்து அவருக்கு ராணுவ கண்டோன்மெண்ட் பகுதியில் ஒரு விருந்தினர் இல்லம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த விருந்தினர் இல்லம் கலாமுக்கு பிடித்த வகையில் மாற்றி அமைத்துள்ளது ராணுவம்.
கலாமுக்குப் மிக பிடித்தமான நீல வண்ண வாயில், ஜன்னல் திரைகள் மாட்டப்பட்டுள்ளன. அவருக்காக இந்த இல்லத்தை அழகு படுத்தும் வேலையை ராணுவ அதிகாரிகளின் மனைவிகள் செய்துள்ளனர்.
இன்று சென்னை வருகிறார்:
இந் நிலையில் இன்று மாலை கலாம் சென்னை வருகிறார்.
அண்ணா பல்கலைக்கழகத்தினர் விருந்தினர் இல்லத்தில் தங்கும் கலாம் நாளை முதல் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கவுள்ளார்.
கலாமை வரவேற்க அண்ணா பல்கலைக்கழகத்தில் மிகச் சிறப்பான வரவேற்புகள் செய்யப்பட்டுள்ளன.













Click it and Unblock the Notifications