அரசு மருத்துவமனையில் இன்ஸ்பெக்டர்ஏட்டு கட்டிப் புரண்டு சண்டை
சிவகங்கை:சிவகங்கை அரசு பொது மருத்துவமனையில் இன்ஸ்பெக்டர் ஒருவரும், தலைமைக் காவலரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த தலைமைக் காவலர் பின்னர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சிதம்பர முருகேசன். இதே காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருப்பவர் போஸ்.
ஒரு வழக்கு தொடர்பாக வாக்குமூலம் வாங்குவதற்காக அரசு மருத்துவமனைக்குச் சென்றிருந்தார் போஸ். அப்போது சிதம்பர முருகேசனும் அங்கு சென்றார்.
அப்போது மருத்துவமனையில் இருந்த ஒரு பெண், போஸ் குறித்து சிதம்பர முருகேசனிடம் புகார் கூறினார்.
போஸ் குடித்து விட்டு வந்து தன்னை தரக்குறைவாகப் பேசித் திட்டியதாக அந்தப் பெண் கூறியுள்ளார்.
இதையடுத்து போஸைக் கூப்பிட்டு கண்டித்துள்ளார் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன். இதனால் ஆத்திரமடைந்த போஸ், சிதம்பர முருகேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் இது கைகலப்பாக மாறியது.
இன்ஸ்பெக்டரும், தலைமைக் காவலரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். இந்த சண்டையை மருத்துவமனைக்கு வந்த பொதுமக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர்.
பின்னர் தலைமைக் காவலர் மீது இன்ஸ்பெக்டர் புகார் கொடுத்தார். அதன் பேரில் போஸ் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications