திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குரூ. 1.25 கோடியில் தங்கத் தேர்
மதுரை:மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு ரூ. 1.25 கோடி மதிப்பிலான தங்கத் தேர் செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் விஜயராகவன் மற்றும் கோவில் செயல் அதிகாரி மற்றும் துணை ஆணையரான பெருமாள் சாமி ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில்,
திருப்பரங்குன்றம் கோவிலில் தங்கத் தேர் நிறுத்துவதற்காக தனியாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அது முடியும் தருவாயில் உள்ளது.
அடுத்த 2 மாதங்களில் தங்கத் தேர் செய்யும் பணி முடிந்து விடும். 11 அடி உயரமும், 11 கிலோ எடையுள்ள தங்கத்தாலும், 250 கிலோ தாமிரத்தை கொண்டும் இந்தத் தங்கத் தேர் செய்யப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் தேர் தயாராகி விடும்.
திருப்பரங்குன்றம் கோவில் புனரமைப்பு பணிக்காக தமிழ்நாடு சுற்றுலாத்துறை ரூ. 81 லட்சம் ஒதுக்கியுள்ளது.
தினமும் 5,000 முதல் 6,000 பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கோவிலுக்கு வருகிறார்கள். திருவிழா காலமான கார்த்திகை, பங்குனியில் 75,000 பேர் முதல் 1 லட்சம் பேர் வருகிறார்கள்.
கோவிலுக்கு வரும் பயணிகள் பயன் பெறும் வகையில் கோவிலை சுற்றிலும், குழந்தைகள் பூங்கா, கழிப்பிட வசதி, மின்விளக்கு வசதி, சுற்றுலா பயணிகள் உடைமைகளை வைக்க அறை மற்றும் கிரிவலம் வருவதற்கு தனிப்பாதை என அனைத்து வசதிகளும் செய்யப்பட இருக்கிறது.
இதற்கான பணிகளை வரும் டிசம்பர் மாதத்துக்குள் விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.












Click it and Unblock the Notifications