சிவாஜி, கிரீடம் திருட்டு விசிடி பறிமுதல்-6 பேர் கைது
சென்னை: சிவாஜி, கிரீடம் மற்றும் பல புதுப்படங்களின் திருட்டு விசிடி உள்ளிட்ட 2500க்கும் மேற்பட்ட திருட்டு விசிடிக்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து திருட்டு விசிடி தடுப்பு தனிப் படை டிஐஜி ஆறுமுகம் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் திருட்டு விசிடிக்கள் விற்பனை நடந்து வருவதாக தகவல் கிடைத்தது.அதன்படி போலீசார் மாத்தூர், கந்தன்சாவடி, பழைய வண்ணாரப்பேட்டை, சோழிங்கநல்லூர் மற்றும் கே.கே.நகர் ஆகிய இடங்களில் சோதனை நடத்தி திருட்டு விசிடி தயாரிக்கும் கும்பலை பிடித்தனர்.
பிடிபட்டவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள், திருட்டுத்தனமாக பதிவு செய்யப்பட்ட 2500 சிடிக்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
சிவாஜி, கிரீடம், என்னைபார் யோகம் வரும் உள்ளிட்ட புதுப் படங்களின் திருட்டு விசிடிக்களும் இதில் அடக்கம். பறிமுதல் செய்யப்பட்ட விசிடிக்களின் மதிப்பு ரூ. 25 லட்சமாகும்.
இது தொடர்பாக சுரேஷ் (21), ஜெயசங்கர் (31), பாலாஜி (20), மாணிக்கம்(30), சையது இப்ராஹிம் (43), மோகன் (22) ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் என்றார்.












Click it and Unblock the Notifications