ஸ்டாலின் விழாவில் நிருபருக்கு அடி உதை
சென்னை:உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட விழாவில் ஆங்கில நாளிதழின் செய்தியாளரை பாமக மற்றும் திமுகவினர் இணைந்து சரமாரியாகத் தாக்கினர். இதனால் ஸ்டாலின் விழாவை பத்திரிக்கையாளர்கள் புறக்கணித்தனர்.
சென்னை அருகே பம்மலில் எக்ஸ்னோரா அமைப்பின் சார்பில் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் செய்தி சேகரிப்பதற்காக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் செய்தியாளர் மாதவன் வந்திருந்தார். அப்போது அவரை வழிமறித்த பம்மல் நகராட்சி பாமக கவுன்சிலர் பரசுராமன் மற்றும் திமுகவைச் சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோர் வழிமறித்து சரமாரியாக அடிக்க ஆரம்பித்தனர். என்ன ஏது என்று தெரியாமல் மாதவன் நிலை குலைந்தார்.
மாதவன் அடிவாங்குவதைப் பார்த்த பிற செய்தியாளர்கள் அங்கு விரைந்து வந்தனர். இதையடுத்து பரசுராமனும், ஸ்ரீதரும் அங்கிருந்து தப்ப முயன்றனர். ஆனால் போலீஸார் பரசுராமனை வளைத்துப் பிடித்தனர். ஆனால் திமுகவைச் சேர்ந்த ஸ்ரீதர் மட்டும் தப்பி விட்டார்.
பரசுராமனை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பத்திரிக்கையாளர்கள், ஸ்டாலின் விழாவைப் புறக்கணிப்பதாக கூறி விட்டு அங்கிருந்து வெளியேறினர்.












Click it and Unblock the Notifications