எதற்கெடுத்தாலும் முட்டுக்கட்டையா?ஒதுங்கிக் கொள்ளத் தயார் - கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:அரசின் நல்ல திட்டங்களுக்கெல்லாம் முட்டுக் கட்டைகள் போடும் கூட்டணி நண்பர்கள், அரசியல் கட்சிகள், எனது ஆட்சியை விரும்பாவிட்டால், நான் ஒதுங்கிக் கொள்ளத் தயார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

வேலையற்ற இளைஞர்களுக்கு 3வது கட்ட அரசு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியை முதல்வர் கருணாநிதி நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையும் 3 லட்சத்து 38 ஆயிரத்து 818 பேருக்கு இதுவரை தமிழகம் முழுவதும் 55 கோடியே 52 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் இந்த்த தொகை இழப்பை சரிக்கட்டிக் கொள்கிற வழிகள் குறைவாக இருந்தாலும் கூட, வேலைவாய்ப்பற்றவர்களின் குடும்பங்களைக் காக்கிற கடமை அரசுக்கு உள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில் வேலை நியமனத் தடைச் சட்டம் கொண்டு வந்தார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் அந்த சட்டத்தை முதல் வேலையைக உடைத்தோம். அதன் பின்னர் 1 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு கடந்த ஓராண்டு காலத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர்களின் வாழ்க்கையில் ஒளி விளக்கை கழக ஆட்சி ஏற்றி வைத்துள்ளது.

கடந்த ஆட்சியில் வேலை கிடைக்கவா போகிறது என்ற எண்ணத்தில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பகங்களில் பதிவை புதுப்பிக்காமல் விட்டு விட்டனர். திமுக ஆட்சிக்கு வந்ததும், தங்களது பதிவை புதுப்பிக்க கால அவகாசம் கோரினர். விதிமுறையிலே அதற்கு இடம் இல்லாவிட்டால் என்ன, எங்களது மனதில் இருக்கிறது என்று சொல்லி அந்த 2 லட்சத்து 90 ஆயிரம் பேரை மீண்டும் அவர்களுடைய பதிவினைப் புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பளித்தோம்.

எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது:

எங்களால் முடிந்ததைச் செய்கிறோம். எங்களால் முடியாவிட்டால், எங்களால் இவ்வளவுதான் முடிந்தது என்று உங்களிடம் விடைபெற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறோம்.

எல்லோரையும் திருப்திப்படுத்தி விட முடியாது. எல்லோருடைய மன நிறைவையும் பெற்று விட முடியாது. அங்கொன்றும், இங்கொன்றுமாக சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும்.

அந்தக் குறைபாடுகளை நீக்குவதற்கு நல்ல அறிவுரைகளை, நல்ல வழிமுறைகளைச் சொல்ல வேண்டும். நல்ல வழி காட்டுபவர்களாக எங்களுடைய தோழர்கள் இருக்க வேண்டும். ஏன் பொதுமக்களின் பிரதிநிதிகள் கூட அப்படி இருக்கலாம்.

அப்படி இருந்தால் நாங்கள் செய்து கொண்டே இருப்போம். இல்லாவிட்டால், என்னைப் பொருத்தவரையில் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், என்னால் முடிந்தது இவ்வளவுதான், இதற்கு மேல் வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் வேறு யாராவது வந்து செய்யட்டும், நான் தாராளமாக அவர்களை வாழ்த்த, பாராட்ட, அவர்களுக்கு புகழ் மாலை சூட்ட கடமைப்பட்டுள்ளேன்.

இந்த ஆட்சிக்கு ஒத்துழைக்க இன்னும் சிலர் தயங்குகிறார்கள். இதை எண்ணும்போது வேதனை ஏற்படுகிறது.

தொழிற்சாலை ஒன்று வருகிறதென்றால், எத்தனை தடைகளுக்கு இடையே, எத்தனை குறுக்கீடுகளுக்கு இடையே, ஒரு தொழிற்சாலை வரவேண்டியுள்ளது. ஒரு அரசு நற்பெயர் எடுத்து மக்களுக்காக நல்ல வளங்களைப் பெருக்கி, நல்ல தொழில்களை உருவாக்கி, மக்களை வாழ வைத்தால், இந்த அரசு நீடித்தால், இன்னும் வேரூண்றி, பலமாகி விடுமே என்பதற்காக அந்த அரசை இப்போதே வீழ்த்த வேண்டும் என்பதற்காக மக்களைத் தூண்டி விடுகிற சில பேர், சில விஷமிகள், சில சமுதாயக் கிருமிகள் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இத்தகைய அரசியல், நம்முடைய மனதுக்கு கொஞ்சம் ஆறுதலை உண்டாக்கக் கூடியதாக இருக்குமே அல்லாமல், எண்ணிய காரியத்தை நாம் முடித்து விட்டோம் என்று கம்பீரமாகச் சொல்லிக் கொள்வதற்கு அது பயன்படுமே தவிர, மக்களுக்கு அது பயன்படாது.

மக்ளுக்கு நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் என்று ஒரு நல்ல அரசு முற்பட்டால், அதற்கு ஊக்கமும், துணையுமாக இருக்க வேண்டியதுதான் மற்ற நண்பர்களுடைய, அரசியல் கட்சிகளுடைய செயலாக இருக்க வேண்டும்.

அப்படி இல்லாமல் அவைகளைத் தடுத்து நிறுத்துகிற அந்த கித்தாப்பிலே, வெற்றி பெற்று விட்டோம் என்று எண்ணினால், எதையும் சமாளிக்க வேண்டும் என்று எண்ணுகிற அரசாக இருந்தால், வா வந்து பார் என்று சொல்லுகின்ற வீம்பு பிடித்த அரசாக இருந்தால், மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், எடுத்த காரியத்தை முடித்தே தீருவோம் என்று பிடிவாதமாக இருக்கலாம்.

ஆனால், என்னைப் போன்றவர்கள், எங்களைப் போன்றவர்கள், பரவாயில்லை, மக்கள் பாடு, உங்கள் பாடு என்று உங்களுடைய பிரச்சினையை விட்டு விட்டு நாங்கள் ஒதுங்கிக் கொள்ளவும் தயார் என்பதைதான் இந்த நேரத்தில் அறிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

நல்ல காரியங்களைச் செய்ய நாட்டிலே இடம் இல்லையென்றால், சில கட்சிகள் முட்டுக்கட்டை போடுகின்றன, குறுக்கீடு செய்கின்றன என்றால், சிலர் இதை வைத்துத்தான் வளர வேண்டும், கட்சியை வளர்க்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள் என்றால், நான் அதற்காக வருத்தப்படவில்லை. அவர்கள் பாடு, மக்கள் பாடு என்று மக்களிடத்திலே இதை ஒப்படைத்து விடுகிறேன்.

நான் பிறக்கும்போதே முதல்வராகி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் பிறக்கவில்லை. ஏதோ காலத்தின் கோலம், நாட்டு நிலைமை, சமுதாய நிலைமை, மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம், எனக்குப் பகுத்தறிவு போதித்த பெரியார், அரசியல் ஞானம் ஊட்டிய அண்ணா, தியாகம் என்றால் என்ன என்று எனக்கு செயல் மூலம் கற்றுக் கொடுத்த காமராஜர் போன்றவர்கள் காரணமாக இருக்கலாம்.

என்னுடைய வார்த்தைகளை நம்புவீர்களேயானால், நான் உங்களோடு இருப்பதில் அர்த்தம் உண்டு, பொருத்தம் உண்டு. இல்லாவிட்டால் எனக்கென்ன என்று எண்ணுகிற ஒரு சமூகம் இருக்குமேயானால், அது எவ்வழி போனாலும் பரவாயில்லை என்று மக்களிடத்திலே சொல்லி விட்டு, என்னுடைய பாதையை நான் பார்த்துக் கொள்வேன் என்றார் கருணாநிதி.

கருணாநிதியின் இந்தப் பேச்சு கூடவே இருந்து குடைச்சலைக் கொடுத்துக் கொண்டிருக்கிற பாமகவுக்குத்தான் முக்கிய எச்சரிக்கையாக கருணாநிதி விடுத்துள்ளார் என்பதால் திமுக கூட்டணிக் கட்சிகளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் டாடா நிறுவனம் டைட்டானியம் டை ஆக்சைடு நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்கு பாமக, அதிமுக, சரத்குமார் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் மொத்தமாக சேர்த்துத்தான் நேற்றைய பேச்சில் முதல்வர் பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+