சென்னை, கோவையில் மிக பலத்த பாதுகாப்பு
சென்னை:கோவை குண்டுவெடிப்பு தீர்ப்பு வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து சென்னை மற்றும் கோவை நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
1998ம் ஆண்டு கோவை நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட அல் உம்மா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா, அவரது மகன் சித்திக் அலி உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு வருகிற 6ம் தேதி என்ன தண்டனை என்பது அறிவிக்கப்படவுள்ளது. பாட்ஷாவுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை கிடைக்கலாம் என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தற்போது கோவை நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தண்டனை அறிவிக்கப்படும் வரை தொடரும் என காவல்துறை அறிவித்துள்ளது.
கோவை நகரம் மற்றும் மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் தொடர்ந்து செயல்படும் எனவும் இந்த நுழைவாயில்கள் வழியாக வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குள்ளாக்கப்படும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேபோல, சென்னை நகரிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்டிரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த இடங்களில் வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்க வைக்கும் நிபுணர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். மோப்ப நாய்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications