தாதா பேச்சை கருணாநிதி தொடர்ந்தால்...ஜெ. மீண்டும் எச்சரிக்கை
சென்னை:தாதாவுடன் எனக்கு ஒப்பந்தம் உள்ளது என்று முதல்வர் கருணாநிதி தொடர்ந்து பேசி வந்தால் அவரது பேச்சை நீதிமன்ற நடவடிக்கை மூலம் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் எச்சரித்துள்ளார்.
டைட்டானியம் டை ஆக்சைடு திட்ட விவகாரம் தொடர்பாக கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் கடந்த சில நாட்களாக கடும் அறிக்கைப் போர் நடந்து வருகிறது.
இந் நிலையில் கருணாநிதிக்கு ஜெயலலிதா மீண்டும் எச்சரிக்கை விடுத்து அறிக்கை விட்டார். அதில், டைட்டானியம் டை ஆக்சைடு தொழிற்சாலை சம்பந்தமாக கருணாநிதி கூறிய கருத்தை எதிர்த்து நான் வழக்கு தொடருவேன் என்று நான் வெளியிட்ட அறிக்கையைப் படித்து விட்டு கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், முழுக்க முழுக்க வசை பாடியுள்ளார்.
தாதாவோடு எழுதப்படாத ஒப்பந்தம் என்று என் மீது அபாண்டமான குற்றச்சாட்டை வீசியுள்ளார். எந்த தாதாவுடனும், எனக்கு எவ்விதமான ஒப்பந்தமும் இல்லை. எனக்கு எந்த தாதாவையும் தெரியாது.
2005ம் ஆண்டு நான் முதல்வராக இருந்தபோது டைட்டானியம் டை ஆக்சைடு தொழிற்சாலை அமைப்பதற்கான கோப்பில் நான் கையெழுத்திடவில்லை என்று கருணாநிதியே தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆனால் பிறகு அந்தக் கோப்பு முதல்வர் அலுவலகத்தில்தான் இருந்தது என்றும் கூறுகிறார். ஒரு முதல்வர் கையெழுத்துப் போடாமல் திருப்பி அனுப்பிய கோப்பை முதல்வரின் செயலாளர் அதை அந்தத் துறைக்குச் சம்பந்தப்பட்ட செயலாளருக்கு அனுப்பினாரா இல்லையா என்பதை கண்காணிக்க வேண்டிய அவசியம் முதல்வருக்கு இல்லை. இது நான்கு முறை முதல்வரான கருணாநிதிக்கு தெரியாமல் போனது வியப்பாக உள்ளது.
மக்களின் வாழ்வாதரங்களை சிதைக்கும் செயல்தான் டைட்டானியம் டை ஆக்சைடு திட்டம் ஆகும். இத்தகைய திட்டத்தை எதிர்த்து மக்களுடன் சேர்ந்து போராடப் போவதாக நான் அறிவித்தவுடன்தான் அதிலிருந்து பின்வாங்கி விட்டு தமிழக மக்களை ஏமாளிகள் என்று சொல்லும் அளவுக்கு கருணாநிதிக்கு தைரியம் கூடியுள்ளது.
தனது பேச்சையும், வசைபாடலையும், குற்றச்சாட்டுக்களையும் கருணாநிதி இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றம் அதை நிறுத்தச் செய்வோம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
இதேபோல ஜெயலலிதா வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்தாலம்பட்டியில் உள்ள அரசினர் கள்ளர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றம் மற்றும் ஆசிரியர்கள் நியமிக்காதது குறித்து பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.
ஆனால் இதை கருணையோடு அணுகாத அரசு, காவல்துறையை ஏவி விட்டு தடியடி நடத்தியதால், 20க்கும் மேற்பட்ட மாணவர்களும், பெற்றோரும் காயமடைந்துள்ளனர்.
காவல்துறையின் இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். எனது அன்புக்குரிய மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் பொதுமக்களையும், மாணவர்களையும் தாக்கிய போக்கைக் கண்டிப்பதோடு, மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார் ஜெயலலிதா.
கட்சி அலுவலகத்திற்குத் திடீர் வருகை:
தனது கட்சி அலுவலகத்திற்குத் தடபுடலாக வருவதை வழக்கமாகக் கொண்ட ஜெயலலிதா நேற்று சொல்லாமல், கொள்ளாமல் திடீரென விசிட் அடித்ததால் அங்கிருந்த ஒரு சில அதிமுக தொண்டர்கள் வியப்படைந்தனர்.
நேற்று பிற்பகல் 12.30 மணிக்கு தனது வீட்டிலிருந்து கட்சித் தலைமை அலுவலகத்திற்கு திடீரென வந்தார் ஜெயலலிதா. அப்போது அங்கு ஒரு சில தொண்டர்களே இருந்தனர்.
ஜெயலலிதா கட்சி அலுவலகம் வந்தது தெரிந்தவுடன் கட்சி பிரமுகர்கள் தொண்டர்களை கூட்டிக் கொண்டு ஓடி வந்து வழக்கம் போல புரட்சித் தலைவி வாழ்க என்று கோஷம் போட்டனர்.
பிறகு உள்ளே சென்ற ஜெயலலிதா அங்கிருந்த தேர்தல் பிரிவு செயலாளர் ஓ.பன்னீர் செல்வம், சட்டப் பிரிவு செயலாளர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் மாணவ, மாணவியர்கள், இளைஞர்ளுக்காக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்துமாறு ஆலோசனை கூறினாராம் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் திடீர் வருகையை அறிந்ததும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கட்சித் தலைமை அலுவலகத்திற்கு ஓட்டமாய் ஓடி வந்தனர்.
இனிமேல் வாரம் தோறும் கட்சி அலுவலகத்திற்கு வரப் போகிறாராம் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications