நாடாளுமன்றம் முன்பு ஆக. 20ம் தேதிகேரள முதல்வர், அமைச்சர்கள் ஆர்ப்பாட்டம்
திருவனந்தபுரம்:கேரள வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உரிய நிதியை ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து நாடாளுமன்றம் முன்பு ஆகஸ்ட் 20ம் தேதி மறியல் போராட்டம் நடத்தப் போவதாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் அறிவித்துள்ளார்.
கேரள அமைச்சரவைக் கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் அச்சுதானந்தன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், கேரளாவின் தேவைகளை தீர்க்க மத்திய அரசு தவறி விட்டது. வெள்ள நிவாரணம் தொடர்பாக நாம் கேட்ட நிதியுதவியை இதுவரை மத்திய அரசு தரவில்லை.
எனவே கேரள மக்களின் எதிர்ப்பை மத்திய அரசுக்குக் காட்டும் முகமாக நாடாளுமன்றம் முன்பு ஆகஸ்ட் 20ம் தேதி நான், அமைச்சர்கள், இடது சாரித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வது என அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.
அதற்கு முன்பாக ஆகஸ்ட் 10ம் தேதி கேரளாவைச் சேர்ந்த அனைத்து எம்.பிக்களும் நாடாளுமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்றார் அச்சுதானந்தன்.
மேலும், பாலக்காடு ரயில்வே கோட்டத்தைப் பிரிப்பது தொடர்பாக சர்ச்சை நிலவும் நிலையில், சேலம் கோட்ட தொடக்க விழாவுக்கு ரயில்வே துறை ஏற்பாடு செய்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்த அச்சுதானந்தன், மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்தின் முடிவு ஒரு தலைபட்சமானது என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications