கேரளாவில் மதானி-இன்று பொதுக் கூட்டம்
கோவை:கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பளிக்கப்பட்ட கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி, ஜாமீனில் விடுதலையானார்.
இதையடுத்து கேரளா திரும்பிய அவர் இன்று திருவனந்தபுரத்தில் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து கேரள ஜனநாயக மக்கள் கட்சித்தலைவர் அப்துல் நாசர் மதானி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து நேற்று இரவோடு இரவாக மதானி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கேரளாவிற்கு சென்றார்.
![]() |
நள்ளிரவு கேரள மாநிலம், நெடும்பாசேரி விமான நிலையத்தின் அருகேயுள்ள ஹோட்டலில் சென்று தங்கினார். அவர் வந்த தகவலை அறிந்து அவரது கட்சினரும் ஆதரவாளர்களும் நள்ளிரவில் ஹோட்டல் முன் குவிந்தனர்.
இதையடுத்து மதானி தங்கியிருந்த ஹோட்டலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இன்று காலை விமானம் மூலம் அவர் திருவனந்தபுரம் வந்தார். அவரை அவரது கட்சித் தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் வரவேற்றனர். இன்று மாலையில் திருவனந்தபுரம் சண்முகம் கடற்கரையில் நடக்கவிருக்கும் பொதுக் கூட்டத்தில் மதானி பேசவிருக்கிறார்.
இதற்கிடையே மதானிக்கு நிரந்தரமாக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என கேரள முதல்வர் அச்சுதானந்தன் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு மீது வழக்கில்லை-மதானி
இதற்கிடையே, நிரபராதியான தன்னை 9 வருடங்களாக சிறையில் அடைத்திருந்ததற்காக தமிழக அரசு மீது வழக்கு எதையும் தொடரும் எண்ணம் தன்னிடம் இல்லை என்று மதானி கூறியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் மதானி பேசினார். அப்போது, தமிழக அரசு மீது வழக்கு தொடரும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் கோவை குண்டுவெடிப்பு வழக்கை தமிழக அரசு மறுபடியும் திறந்தால் (அப்பீல் செய்தால்), நான் வழக்கு போடுவேன்.
எனது நடவடிக்கைகளில் ஏதாவது தவறு இருக்குமானால் அதைத் திருத்திக் கொள்ள முயற்சிப்பேன். கேரள மக்களின் நலனுக்காக இனி உள்ள வாழ்நாளைக் கழிக்கப் போகிறேன். தமிழகத்திற்கும், கேரளாவுக்கும் பாலமாக விளங்குவேன்.
எனக்கும் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமும், தொடர்பும் இல்லை என்றார் மதானி.
மதானியுடன் குற்றவாளிகள் இல்லை என அறிவிக்கப்பட்ட மற்ற 7 கைதிகளும் கூட நேற்று மாலையே விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.













Click it and Unblock the Notifications