சிங்கப்பூரில் சீனத் திருடனைப் பிடித்தஜி.கே.மணி மகன்- போலீஸார் பாராட்டு
சென்னை:சிங்கப்பூருக்கு டூர் போன இடத்தில் சீனப் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சீனத் திருடனை துணிச்சலுடன் மடக்கிப் பிடித்து சிங்கப்பூர் போலீஸாரிடம் ஒப்படைத்து அவர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார் பாமக தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன்.
பாமக தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க் குமரன். இவர் தனது நண்பர்கள் புகழேந்தி, தேவா, அருண், முருகேசன் ஆகியோரோடு சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
பூன்கெங் என்ற இடத்தில் உள்ள பஸ் நிலையப் பகுதியில் இரவில் அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு சீனப் பெண்ணிடம், ஒரு சீன வாலிபர், தகராறு செய்து நகை, கைக் கடிகாரம் உள்ளிட்டவற்றைப் பிடுங்க முயற்சித்தார்.
அந்தப் பெண் அந்தத் திருடனிடமிருந்து தனது பொருட்களைக் காத்துக் கொள்ளப் போராடினார். இதைப் பார்த்த தமிழ்க் குமரனும், அவரது நண்பர்களும் சினிமாவில் வருவதைப் போல பாய்ந்து சென்று அந்தத் திருடனை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து, அப்பெண்ணையும், அவரது பொருட்களையும் காப்பாற்றினர்.
சிங்கப்பூர்க்காரர்களே திருடனைப் பிடிக்க தயங்கி நின்று வேடிக்கை பார்த்தபோது தமிழகத்தைச் சேர்ந்த இவர்கள் துணிச்சலுடன் பாய்ந்து சென்று திருடனைப் பிடித்து அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் தமிழ்குமரன் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் வந்து திருடனைப் பிடித்துச் சென்றனர். பின்னர் தமிழ்க் குமரனையும், அவரது நண்பர்களையும் வெகுவாகப் பாராட்டி கேடயத்தையும் பரிசாக வழங்கினர்.
வழிப்பறிக் கொள்ளையனிடம் சிக்கி மீண்ட சீனப் பெண்ணும், தகவல் தெரிந்து விரைந்து வந்த அவரது மகளும் தமிழ்க் குமரன் மற்றும் அவரது நண்பர்களைப் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications