குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு நாளைதண்டனை - தமிழகம் முழுவதும் பாதுகாப்பு
சென்னை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 153 பேருக்கும் நாளை தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளது. இதையடுத்து கோவை உள்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா, அவரது மகன் சித்திக் அலி உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நாளை கோவை தனி நீதிமன்ற நீதிபதி உத்திராபதி தண்டனை விவரத்தை அறிவிக்கவுள்ளார்.
![]() |
இதையடுத்து கோவை உள்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை முழுவதும் அதிரடி பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், விமான நிலையம், வழிபாட்டு தலங்கள், மக்கள் நெருக்கம் மிக்க பகுதிகள், வணிக பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல சென்னை, மதுரை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவில்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சகிதம் போலீஸார் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக டிஜிபி முகர்ஜி கூறுகையில், கோவை குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கப்படவிருக்கிறது. இதற்காக கோவை நகர் முழுவதும் கமாண்டோ படை உட்பட அனைத்து போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை தவிர தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோவை நகரின் எல்லைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, நகருக்குள் வரும் வாகனங்கள் கடும் சோதனைக்கு பின்பே உள்ளே அனுமதிக்கப்படுகின்றது.
கோவை நகரில் 740 போலீஸார், சிறப்புக் காவல் படையினர் 245 பேர், ரிசர்வ் போலீஸார் 80 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
வாகன ரோந்துப் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தனி நீதிமன்ற வளாகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், தமிழகத்தில் நக்சல்களை தேடும் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தப்பிச்சென்ற நக்சல்கள் காளிதாஸ், நவீன்பிரசாத் ஆகியோரை தேடும் பணி நடந்துவருகிறது.
வெள்ளை ரவி போன்ற பிரபல ரெளடிகளை பிடிக்கப் போகும்போது சில நேரங்களில் என்கவுண்டர் நடந்து ரவுடிகள் கொல்லப்படுவது சகஜம்தான் என்றார் முகர்ஜி.



Click it and Unblock the Notifications
