அன்சாரி வெற்றி: துணை ஜனாதிபதியாகஇன்று பதவியேற்பு-மாறி விழுந்த 30 வாக்குகள்
டெல்லி:நாட்டின் 13வது துணை குடியரசுத் தலைவராக காங்கிரஸ்-இடது சாரிகள் கூட்டணி சார்பில் போட்டியிட்ட முகம்மது ஹமீத் அன்சாரி வெற்றி பெற்றுள்ளார்.
துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று நடந்தது. நாடாளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டு வாக்களித்தனர்.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் அன்சாரியும், பாஜக கூட்டணி சார்பில் நஜ்மா ஹெப்துல்லாவும், மூன்றாவது அணி சார்பில் ரஷீத் மசூத்தும் போட்டியிட்டனர்.
நேற்று மாலை வாக்குப் பதிவு முடிந்ததும் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. மொத்தம் 762 வாக்குகள் பதிவாகியிருந்தன.
இதில், அன்சாரிக்கு 455 வாக்குகள் கிடைத்தன. நஜ்மா ஹெப்துல்லாவுக்கு 222 வாக்குகள் கிடைத்தன. 3வது அணி வேட்பாளர் மசூதுக்கு 75 வாக்குகளே கிடைத்தன.
10 ஓட்டுக்கள் செல்லாத ஓட்டுக்கள் ஆகும்.
அன்சாரிக்கு எதிர்க் கட்சிகளின் தரப்பில் இருந்தும் 30 எம்பிக்கள் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று பதவியேற்பு:
துணைக் குடியரசுத் தலைவராக அன்சாரி இன்று பதவிேயற்கவுள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
பிரதீபா-பிரதமர் வாழ்த்து:
அன்சாரிக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோ வாழ்த்து தெரிவித்தனர்.
அன்சாரி வெற்றி பெற்றதும், பிரதீபா பாட்டீல், தொபேசி மூலம் அவரைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமர் மன்மான் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அன்சாரியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரை வாழ்த்தினர்.
அன்சாரியின் வெற்றி குறித்து மன்மோகன் சிங் கூறுகையில், திறமைக்கும், மதச்சார்பற்ற கொள்கைக்கும் கிடைத்த வெற்றி இது என்றார்.
சோனியா கூறுகையில், அன்சாரிக்காக ஓட்டளித்த அனைத்துக் கூட்டணிக் கட்சியினருக்கும் எனது நன்றிகள். அவரது வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த வெற்றி எங்களுக்குக் கிடைத்துள்ள தொடர்ச்சியான 2வது வெற்றியாகும் என்றார் அவர்.
முதல்வர் கருணாநிதியும் அன்சாரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பொறுப்புகள் காத்திருக்கின்றன: அன்சாரி
தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து அன்சாரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், துணை குடியரசுத் தலைவர் பதவியையும், ராஜ்யசபா தலைவர் பதவியையும் நான் முடிந்தவரை சிறப்பாக செய்வேன். இவை இரண்டும் மிகப் பெரிய பணிகள். இவற்றை செம்மையாக செய்ய நான் கடுமையாக உழைப்பேன்.
ராஜ்யசபா உறுப்பினர்கள் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதன் மூலம் அவை நடவடிக்கைகளை சுமூகமாக நடத்த முடியும்.
ராஜ்யசபா நடவடிக்கைகள் குறித்து முதலில் தெளிவாக கற்றுக் கொள்ளவுள்ளேன். அரசியல் பின்புலம் இல்லாததை நான் ஊனமாக கருதவில்லை. 40 ஆண்டு காலம் நான் தூதரகப் பதவிகளில் இருந்துள்ளேன். அரசியல் நடவடிக்கைகளுடன் எனக்கு அந்த வகையில் நேரடி அனுபவம் உள்ளது.
ராஜ்யசபா விவாதங்களை விதிமுறைப்படி நடத்துவேன். பாரபட்சம் காட்ட மாட்டேன்.
எனக்குக் கிடைத்துள்ளது தனிப்பட்ட வெற்றி அல்ல. மாறாக கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. எனக்காக வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றிகள். அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் நான் பணியாற்றுவேன் என்றார்.


Click it and Unblock the Notifications
