சங்கிலியில் தோட்டா - பெண்ணால் பரபரப்பு!
சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணி தனது தங்க சங்கிலியில் துப்பாக்கி தோட்டாவை கோர்த்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்தவர் நூர்பிரிஸ் கலில் (52). இவர் கடந்த 10 வருடங்களாக ஷார்ஜாவில் வீட்டுவேலை செய்து வருகிறார்.
விடுமுறையில் வந்துவிட்டு பின்பு மீண்டும் ஷார்ஜா செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். பயணிகளிடம் பாதுகாப்பு சோதனைகள் நடந்தது. அப்போது கலீலை சோதனை செய்யும்போது வெடிகுண்டு பரிசோதனைக் கருவி பீப் ஒலியை எழுப்பியது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகள் கலீலை தனியாக அழைத்துச் சென்று சோதனையிட்டனர். ஆனால் குண்டோ அல்லது வேறு ஆயுதங்களோ அவரிடம் இல்லை. ஆலும் பீப் ஒலி நிற்கவில்லை.
இதனால் குழப்பமடைந்த அதிகாரிகள், கலீல் கழுத்தில் இருந்த தாயத்தைப் பார்த்தனர். அது சற்று வித்தியாசமாக இருந்தது. அதை கழற்றி விட்டுச் சோதித்த பின்னர் பீப் சத்தம் ஏதும் வரவில்லை.
இதையடுத்து அந்த தாயத்தை சோதனையிட்டனர். அப்போதுதான் அதில் ஒரு தோட்டா இருந்தது தெரிய வந்தது. இதைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர்.
தோட்டாவை எதற்கு கழுத்தில் மாட்டியுள்ளீர்கள் என போலீஸார் விசாரணை நடத்தினர். அதற்கு கலீல், நான் இதய நோயாளி. நோய் குணமாக ஒரு சாமியார்தான் இந்த தோட்டாவை அணிந்து கொள்ளுமாறு கூறினார். 5 வருடமாக இதை அணிந்து வருகிறேன் என்றார்.
பின்னர் போலீஸார் அந்த தோட்டாவைப் பறிமுதல் செய்தனர். மேலும், விசாரணையில் அவர் தீவிரவாதி அல்ல என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து விசாரணைக்கு தேவைப்பட்டால் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட அதிகாரிகள், அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.
இந்த குழப்பம் காரணமாக ஷார்ஜா விமானம் கிட்டத்தட்ட அரை மணி நேரம் தாமதமாக கிளம்பியது.












Click it and Unblock the Notifications