முதல்வருக்கு கொலை மிரட்டல் - வாலிபர் கைது
திருப்பூர்: முதல்வர் கருணாநிதியை கொலை செய்யப் போவதாக கூறி திருப்பூர் தாசில்தார் அலுவலகத்திற்குக் கடிதம் அனுப்பிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் தாசில்தார் அலுவலகத்திற்கு கடந்த மாதம் 25ம் தேதி ஒரு கடிதம் வந்தது. அதில், தமிழ்நாடு காவல் பணியில் சேருவதற்கான வயது வரம்பை 24 என்பதிலிருந்து 29 ஆக உயர்த்த தமிழக அரசு மறுத்து விட்டது.
எனவே வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி முதல்வர் கருணாநிதி கோட்டையில் கொடி ஏற்றும்போது அவரை கொலை செய்வோம்.
![]() |
சுதந்திர தினத்தன்று இது கண்டிப்பாக நடக்கும். அடுத்த ஒரு வாரத்திற்கு திமுக கொடிகள் அரைக் கம்பத்தில் நிச்சயம் பறக்கும். வரும் 29ம் தேதி நடக்கும் போலீஸ் தேர்வில் வெடிகுண்டு வெடிக்கும். இது நாங்கள் வணங்கும் எங்கள் கடவுள் அல்லாவின் மீது ஆணை, என எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து தாசில்தார் சித்திக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் அந்தக் கடிதத்தை அனுப்பியது யார் என்று விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருப்பூர் நகராட்சித் தலைவர் செல்வராஜ், முன்னாள் சூலூர் எம்எல்ஏ பொன்முடி ஆகியோருக்கும் முதல்வரை மனித வெடிகுண்டு மூலம் கொல்லப் போவதாக மிரட்டல் கடிதம் வந்திருந்தது.
மூன்று கடிதங்களிலும் சொல்லி வைத்தது போல காவல் பணிக்கான வயது வரம்பே மிரட்டலுக்குக் காரணமாக இருந்தது. எனவே இந்த மூன்றையும் ஒரே நபர்தான் அனுப்பியிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகித்தனர்.
கோவையிலிருந்து இந்தக் கடிதங்கள் அனுப்பப்பட்டது விசாரமையில் தெரிய வந்தது. இதையடுத்து நடந்த தீவிர விசாரணையில், கோவை மாவட்டம் பாப்பநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த முகம்மது ரபீக் என்பவர்தான் கடிதம் எழுதியிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையின்போது மிரட்டல் கடிதம் குறித்து ரபீக் வாக்குமூலம் அளித்தார்.
அதில், நான் 4 முறை காவலர் தேர்வு எழுதினேன். இதில் 3 முறை தேர்ச்சி பெற்றேன். ஆனால் வேலையில் சேர முடியவில்லை. கடைசியாக எழுதிய தேர்வில் தோல்வி அடைந்தேன்.
எனது காவல் கனவு நனவாக வேண்டும் என்பதற்காக , அந்த ஆதங்கத்தில் இந்த மிரட்டல் கடிதங்களை அனுப்பினேன் என்று கூறியுள்ளார்.
ரபீக்கை அவிநாசி கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீஸார் பின்னர் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.













Click it and Unblock the Notifications