பெங்களூர் நகைக் கடையில் துணிகர கொள்ளை
பெங்களூர்: பெங்களூரில் உள்ள பிரபல செம்மானூர் ஜீவல்லர்ஸ் நகைக் கடையில் துப்பாக்கி முனையில் ரூ. 4.5 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
பெங்களூர் கம்மனஹள்ளியில் செம்மானூர் ஜீவல்லர்ஸ் நகைக் கடை உள்ளது. இக்கடைக்கு பெங்களூர் நகரில் 9 கிளைகள் உள்ளன.
![]() |
நேற்று காலை 10.40 மணியளவில் இந்தக் கடைக்கு டாடா இண்டிகா காரில் 6 பேர் வந்தனர். அவர்களில் 4 பேர் மட்டும் இறங்கி கடைக்குள் போனார்கள்.
நகை வாங்கவேண்டும் என கூறி நகைகளை காட்டுமாறு ஊழியர்களிடம் அவர்கள் கூறியுள்ளனர். ஊழியர்களும் நகைகளை எடுத்துக் காட்டியுள்ளனர். அப்போது திடீரென துப்பாக்கியைக் காட்டி கடை ஊழியர்களை அந்த 4 பேரும் மிரட்டியுள்ளனர்.
சத்தம் போட்டால் சுட்டுவிடுவோம் என மிரட்டி கடையிலிருந்த 7 ஊழியர்களையும் கை, கால்களை கட்டி தனி அறையில் போட்டு மூடினர். பின்னர் தொலைபேசி இணைப்புகளைத் துண்டித்தனர். ஊழியர்களிடம் இருந்த செல்போன்களையும் பிடுங்கிக் கொண்டனர்.
அதன் பிறகு தாங்கள் கொண்டு வந்த பெரிய பையில் 36 கிலோ எடையுள்ள தங்க நகைகளை மிக நிதானமாக எடுத்துப் போட்டனர். பிறகு கல்லாவில் இருந்த ரூ. 3 லட்சம் பணத்தையும் எடுத்துக் கொண்டு கம்பி நீட்டினர்.
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு ரூ. 4.5 கோடியாகும். மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியில் இவ்வளவு சர்வ சாதாரணமாக நடந்த கொள்ளை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளையர்கள் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மாறி மாறிப் பேசியுள்ளனர். அனைவருமே 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்.
இந்தக் கடையில் காலை 10 மணி முதல் 11 மணிக்குள்தான் நகைகளை சரி பார்ப்பார்கள். இதைத் தெரிந்து வைத்துக் கொண்டுதான் கடையில் கொள்ளையர்கள் வந்துள்ளனர்.
கொள்ளையர்களின் திருட்டு, கடையில் உள்ள ரகசியக் கேமராவில் பதிவாகியுள்ளது. எனவே விரைவில் கொள்ளையர்களைப் பிடித்து விடுவோம் என போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.













Click it and Unblock the Notifications