மண் இருக்கும், மக்கள் இருப்பார்கள், தமிழ் இருக்காது
விழுப்புரம்:தமிழைப் புறக்கணிக்கும் நிலை நீடித்தால் தமிழகத்தில் மண் இருக்கும், மக்கள் இருப்பார்கள், ஆனால் தமிழ் இருக்காது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் பாமக இளைஞர் சங்கம் சார்பில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
அவர் பேசுகையில், கல்வியில் விழுப்புரம் மாவட்டத்தான் தமிழகத்திலேயே கடைசி இடத்தில் உள்ளது. ஆனால் குடியில் முதலிடத்தில் உள்ளது. ஏன் இந்த நிலைமை என்று யோசிக்க வேண்டும்.
![]() |
இங்கு தரமான கல்வி இல்லை, சமச்சீரான கல்வி இல்லை, நல்ல ஆசிரியர்கள் இல்லை, போதுமான பள்ளிகள் இல்லை. இன்னொரு காரணம் படிக்காத இளைஞர்கள் எல்லாம் வேலை தேடி வெளிநாடுகளுக்குப் போய் விடுகிறார்கள்.
அங்கு போய் கல் உடைக்கிறார்கள், கஷ்டப்படுகிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும். எல்லாம் இருந்தும் அங்கு போய் கஷ்டப்படுகிறார்கள். நமது மாநிலத்தில் என்ன இல்லை, எல்லாம் உள்ளது. எனவே இங்கு உள்ள இளைஞர்கள் இங்கேயே வேலை பார்த்து வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அதற்காக புதிய திட்டம் வைத்துள்ளோம்.
சினிமா மோகம் இளைஞர்களிடம் ஒழிய வேண்டும். தொலைக்காட்சி, சினிமா போன்றவற்றில் சமுதாய கேடான, கலாச்சார சீரழிவுக்கு வித்திடும் நிகழ்ச்சிகள்தான் அதிகம் வருகின்றன.
தமிழைப் பாதுகாப்போம் என்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட நிலை இப்போது இல்லை. இப்போதைய நிலை நீடித்தால் எதிர்காலத்தில் இங்கு மண் இருக்கும், மக்கள் இருப்பார்கள், ஆனால் மொழி இருக்காது. இதற்காக பாட்டாளி இளைஞர்கள் போராட வேண்டும்.
இன்றைய இளைஞர்களை எங்கேயும் தேட வேண்டாம். இரண்டு இடங்களில் ஒன்றில் கட்டாயம் இருப்பர்கள். ஒன்று சினிமா, இன்னொன்று மதுக் கடை. அதை தவிர்க்க வேண்டும்.
தமிழகத்தில் மது விற்பனை அதிக அளவில் உள்ளது. காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கடையைத் திறந்து வைத்து குடிக்கச் சொல்கிறார்கள். நாங்கள் கேட்டுக் கொண்டதால் இரவு 11 மணி வரை என்று குறைத்தார்கள். அதை இன்னும் குறைத்து மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை என்று குறைக்க முடியாதா?. அப்படியே படிப் படியாக குறைத்து முழுமையான மது விலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.













Click it and Unblock the Notifications