அமெரிக்கா, வளைகுடாவில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்
நியூயார்க்:இந்தியாவின் 60வது சுதந்திர தினம் நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் கொண்டாடப்பட்டது. இதேபோல அரபு நாடுகளிலும் இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில் நடந்த சுதந்திர தின விழாவுக்கு இந்தியத் தூதர் நீலம் தியோ தலைமை தாங்கினார். அழர் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் சுதந்திர தின உரையை வாசித்தார்.
இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் 500க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நியூஜெர்சி மாகாண போக்குவரத்து ஆணையர் கிரீஸ் கொல்லேரி நிகழ்ச்சியில் பேசினார்.அவர் கூறுகையில், உலகிலேயே ஜனநாயகத்தை கட்டிக் காப்பதில் இந்தியாதான் முன்னணியில் உள்ளதாக அவர் பாராட்டினார்.
இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் இளைஞர்கள்தான் என்று கூறிய அவர், இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டுகளானாலும் கூட அது இன்னும் இளைய சமுதாயத்தினரின் நாடாகத்தான் திகழ்கிறது என்றார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் டிரை ஸ்டேட் பகுதியில், இந்தியா தின அணிவகுப்பு நடைபெறவுள்ளது.
அரபு நாடுகளிலும் கொண்டாட்டம்:
அரபு நாடுகளிலும் இந்திய சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
துபாயில் 2000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கலந்து கொண்ட கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் இந்தியன் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் இந்திய சமுதாய நல கமிட்டி ஆகியவை ஏற்பாடு செய்திருந்த கலை நிகழ்ச்சிகளும் இந்தியன் பள்ளி வளாகத்தில் நடந்தன.
இந்தியத் தூதர் வேணு ராஜாமணி, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் உரையை வாசித்தார்.
இதேபோல, அபுதாபியில், நடந்த நிகழ்ச்சியில், இந்தியத் தூதர் தல்மிஸ் அகமது தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில் அகமது பேசுகையில், இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது என்றார்.
தேச பக்திப் பாடல்களும், நடன நிகழ்ச்சியும் நிகழ்ச்சிக்கு அழகூட்டின.












Click it and Unblock the Notifications