கருணாநிதி பேச்சு-மனம் கொதிக்கிறது: ராமதாஸ் ஆவேசம்
திண்டிவனம்:கூட்டணியில் எந்தக் கட்சி இருக்க வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது குறித்து மனம் கொதித்துப் போயுள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை அருகே சோழிங்கநல்லூரில் வீட்டு வசதி வாரியத்திற்கு தாங்கள் கொடுத்த நிலத்தை திரும்பத் தரக் கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக அங்கு சென்ற பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களிடம் கருத்துக் கேட்டார்.
இதற்கு முதல்வர் கருணாநிதி கடும் அதிருப்தி தெரிவித்தார். மேலும், அந்த கூட்டத்தில் ராமதாஸ் பேசிய பேச்சு வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாகவும், இதனால் கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்க வேண்டிய காலம் நெருஙகி விட்டதாகவும் காட்டமாக கூறியிருந்தார்.
இதுகுறித்து இன்று திண்டிவனம் அருகே உள்ள தனது தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது
முதல்வரின் பேச்சால் நான் மனம் கொதித்துப் போயுள்ளேன்.
வன்முறையைத் தூண்டும் வகையில் நான் அன்று பேசவில்லை. தற்போது தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை தமிழக மக்களே நன்கு அறிவார்கள்.
கார் குண்டுகள் வெடிப்பதை சினிமாவில் மட்டுமே பார்த்துள்ளோம். ஆனால் சமீபத்தில் சிவகங்கையில் நிஜமாகவே கார் குண்டு வெடித்தது.
இரு தினங்களுக்கு முன்பு தென்காசியில் ஒரே நாளில் 6 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டாடா விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் காவடி தூக்குவதாக கூறியுள்ளார் முதல்வர். இந்தப் பேச்சு கண்டனத்துக்குரியது.
உண்மையில் மத்திய, மாநில அமைச்சர்கள்தான் போட்டி போட்டுக் கொண்டு காவடி தூக்கி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications