பளு தூக்கும் வீரர் தற்கொலை: காமன்வெல்த்போட்டியில் வென்றவர்- சாவில் மர்மம்
சென்னை:காமன்வெல்த் போட்டியில் பல்வேறு பதக்கங்கள் வென்ற பிரபல பளு தூக்கும் வீரர் அருண்குமார் தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரது சாவில் மர்மம் இருப்பதாக தந்தை புகார் கூறியுள்ளார்.
திருவள்ளூரைச் சேர்ந்த முருகேசனின் மகன் அருண்குமார் (வயது 30). இவர் பளு தூக்கும் வீரர் ஆவார். கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 1998ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். மெல்போர்ன் காமன்வெல்த் போட்டியில் மயிரிழையில் தங்கப் பதக்கத்தைத் தவற விட்டார்.
பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் (ஐசிஎப்) பணியாற்றி வந்தார் அருண்குமார். இவருக்கும், ஜெயப்ரியா என்பவருக்கும் காதல் மலர்ந்தது. 7 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
கல்யாணத்திற்குப் பின்னர் திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில், மனைவியுடன் வசித்து வந்தார் அருண்குமார். அவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந் நிலையில் நேற்று காலை அருண் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் மகன் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் முருகேசன் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக அருண்குமாருக்கு மாநில அரசு ரூ. 10 லட்சம் பரிசுத் தொகையை அறிவித்தது. ஆனால் அது இன்னும் அவருக்கு வழங்கப்படவில்லை.
அருண்குமாரின் மர்மச் சாவு குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ. 10 லட்சம் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் குமாரும் ப்ரியாவும் ஏகத்துக்கும் கடன் வாங்கியதாகவும், பணம் வராததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் தான் குமார் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு 3 வயதில் மகன் இருக்கிறான். இப்போது ஜெயப்ரியா கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications