பிரிந்து வாழும் மனைவியைக் கற்பழித்த கணவர் கைது
புதுச்சேரி:கணவரின் கொடுமை தாங்க முடியாமல் பிரிந்து வாழ்ந்து வரும் பெண்ணை அவரது தாயார் வீட்டில் புகுந்து கற்பழித்ததாக அப்பெண்ணின் கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி குருசுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தச்சுத் தொழிலாளி சக்திவேல். இவரது மனைவி அந்துவான் நேத்.
இருவரும் காதலித்து கடந்த 2005ம் ஆண்டு கல்யாணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் கல்யாணம் ஆனது முதலே அந்துவானை, சக்திவேல் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மனைவியை அடித்து உதைத்து சித்திரவதை செய்வாராம் சக்திவேல்.
இதனால் மனம் உடைந்த மனைவி அந்துவான் தனது கணவர் வீட்டை விட்டு வெளியேறி தாயார் வீடு உள்ள மிஷன் வீதிக்குப் போய் விட்டார்.
மேலும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்திலும் மனு செய்தார்.
இந்த நிலையில் வழக்கை திரும்பப் பெறுமாறு கூறி அந்துவானை அவ்வப்போது மிரட்டி வந்துள்ளார் சக்திவேல். இந்தச் சூழ்நிலையில், வழக்கு தொடர்பாக வக்கீலைப பார்த்து விட்டு தாய் வீட்டுக்குத் திரும்பிய தன்னை தனது கணவர் கடத்தி, கட்டாயப்படுத்திக் கற்பழித்து விட்டதாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் அந்துவான்.
இதுகுறித்து அவர் கொடுத்துள்ள புகாரில் நான் வழக்கு தொடர்பாக வக்கீலைப் பார்க்கப் போனேன். வக்கீலைப் பார்த்து விட்டு வீடு திரும்பக் காத்திருந்தேன். அப்போது ஆட்டோவில் அங்கு வந்த சக்திவேல், என்னை அதில் கட்டாயப்படுத்தி கடத்திச் சென்றார்.
பின்னர் அவரது வீட்டுக்குக் கூட்டிச் சென்று அங்கு ஒரு அறையில் வைத்து என்னைக் கற்பழித்து விட்டார். அப்போது அவரது தாயார், சகோதரர்கள் கோவிந்தன், குணசேகரன் ஆகியோர் அறையைப் பூட்டி விட்டு கற்பழிப்புக்கு உடந்தையாக இருந்தனர் என்று கூறியுள்ளார் அந்துவான்.
இந்தப் புகாரின் பேரில் சக்திவேலை போலீஸார் கைது செய்தனர். மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications