திமுக- பாமக கூட்டணி உடையுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:திமுகவுடன் தொடர்ந்து பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து தீவிரமாக மோதி வருவதாலும், முக்கிய முடிவு எடுக்கும் நேரம் நெருங்கி விட்டதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளதாலும், திமுக கூட்டணி உடையும் நேரம் வந்துவிட்டதாகவே தெரிகிறது.

குறிப்பாக பாமகவை வெகு விரைவிலேயே திமுக கழற்றிவிட்டுவிடும் எனத் தெரிகிறது.

தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறும் ராமதாஸ் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணிக்குப் போவார் என்றே கருதப்பட்டது. அவரை இழுக்க ஜெயலலிதாவும் பெரும்பாடு பட்டார். ஆனால், ராமதாஸ் கூட்டணி தாவாமல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

தேர்தலில் திமுகவுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பாமக, காங்கிரஸ் ஆகிய கூட்டணிக் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரிக்க ஆட்சியில் அமர்ந்தார் கருணாநிதி.

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என முதல் ஆளாகக் கூறியவர் ராமதாஸ்.அதேபோல இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆட்சியில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்தன.

ஆனால் காங்கிரஸ் மட்டும் ஆட்சியில் பங்கு வேண்டும் என கோரியது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் ேகாரிக்கையை தனது சாதுரியத்தால் சமாளித்து அடக்கி விட்டார் முதல்வர் கருணாநிதி.

இந் நிலையில் விஜய்காந்தின் அசுர வேக வளர்ச்சியால் அதிர்ந்து போயுள்ள ராமதாசுக்கு ஆளும் கட்சியை ஆதரித்துக் கொண்டே இருந்தால் அடுத்த தேர்தலில் நிலைமை மோசமாகிவிடும் என்ற பயம் பிடித்து ஆட்ட ஆரம்பித்ததில் இருந்து திமுகவுடன் மோதலை ஆரம்பித்துவிட்டார்.

சென்னை துணை நகரத் திட்டத்தை வைத்து திமுகவுடனான மோதலுக்கு பிள்ளையார் சுழி போட்டார் ராமதாஸ். சென்னை அருகே துணை நகரம் அமைப்பதற்கு குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைக் கைவிடாவிட்டால் நானே நேரில் இறங்கிப் போராடுவேன் என ராமதாஸ் எச்சரித்தார்.

இதையடுத்து இந்தத் திட்டத்ைதக் கைவிட்டார் முதல்வர் கருணாநிதி. பின்னர் சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தைக் கையில் எடுத்தது பாமக. இதிலும் பாமகவுக்கு சாதகமாக செயல்பட வேண்டிய நிலை கருணாநிதிக்கு ஏற்பட்டது.

அதன் பின்னர் பாமக தொடர்ந்து அரசுக்கு எதிரான நிலையை கடைப்பிடிக்க ஆரம்பித்தது. ஆனால் மக்களுக்கு சாதகமாக அந்தக் கட்சியின் ேகாரிக்கைகள் இருந்ததால் பாமகவை கடுமையாக விமர்சிக்க முடியாத நிலையில் திமுக இருந்தது.

சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அமைச்சர் பொன்முடியை கடுமையாக சாடி ராமதாஸ் பேட்டிகள், அறிக்கைகள் விட்டார். இதற்குப் பொன்முடியும் பதிலடி கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் குறுக்கிட்ட முதல்வர் கருணாநிதி, எதற்கும் ஒரு எல்லை உண்டு என்று எச்சரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்த நிலையில் மணல் கொள்ளையை கையில் எடுத்தார் ராமதாஸ். இதில் அரசை கடுமையாக சாடிய அவர் மணல் கொள்ளையைத் தடுக்காவிட்டால் பெரும் போராட்டம் நடத்துவேன் என்றார்.

இதையடுத்து மணல் ெகாள்ளையைத் தடுக்க நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் கருணாநிதி. இந்த நடவடிக்கைகளும் சில நாட்கள்தான் நீடித்தன. பிறகு காணாமல் போய் விட்டன.

இந்த நிலையில் ெசன்னை அருகே சோழிங்கநல்லூரில் வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்திய நிலத்தை திருப்பித் தரக் கோரி நிலம் கொடுத்தவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இவர்களுக்கு ராமதாஸ் முழு ஆதரவு தெரிவித்தார்.

அவர்களை நேரில் சந்தித்து கருத்தும் கேட்டதோடு, வீட்டு வசதி வாரியம் கட்டிய வீடுகளின் சாவிகளைப் பிடுங்குங்கள் என்றார்.

இது கருணாநிதியை ஆத்திரப்படுத்தி விட்டது. ராமதாஸ் வன்முறையைத் தூண்டுவதாக கடுமையாக விமர்சித்தார்.

இதற்கெல்லாம் உச்சகட்டமாக, டாடாவின் டைட்டானியம் டை ஆக்சைடு பிரச்சினையிலும் பாமகவின் போக்கு திமுகவை பெரும் எரிச்சலில் தள்ளிவிட்டது. தனக்கு எந்தவித ஆதரவும் இல்லாத தென் மாவட்டங்களில் போய் அரசுக்கு எதிராக ராமதாஸ் கிளப்பிவிட்ட கருத்துக் கேட்பு வைபவம் இப்போது மிகப் பெரிய சடங்காகிவிட்டது.

கட்சியே இல்லாத அரசியல்வாதிகள் எல்லாம் வட்டிக்கு காசு வாங்கி வாடகைக்கு டாடா சுமோ எடுத்துக் கொண்டு, பழைய துண்டை துவைத்து காய வைத்து, தோளில் போட்டபடி சாத்தான்குளத்தில் நிலமே இல்லாதவர்கள், சம்பந்தமே இல்லாதவர்களிடம் எல்லாம் டாடா திட்டம் குறித்து கருத்து கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதில் ராமதாஸ் பற்ற வைத்த சர வெடி இன்னும் வெடித்து முடியவில்லை.

அதே போல டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், முழு மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரி வரும் பாமக அவ்வப்போது போராட்டமும் நடத்தி வருகிறது. மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியமில்லைல என்று தெரிந்தே வேண்டுமென்றே இந்தப் போராட்டத்தை ராமதாஸ் நடத்துவது நமது பெயரைக் கெடுக்கத்தான் என கருணாநிதி நினைக்கிறார்.

இதுதவிர சென்னையில் முதல்வரின் மகள் கனிமொழியை வைத்து நடத்தப்பட்ட சங்கமம் கலை நிகழ்ச்சி ராமதாஸுக்குப் பெரும் அதிருப்தியைக் கொடுத்த விஷயம். கனிமொழிதான் தமிழைக் காக்க பிறந்தவரா என்ற ரீதியில் ராமதாஸ் கடுமையாக விமர்சித்தார்.

ஒரு பக்கம் பாமக இப்படி கருணாநிதிக்கு முட்டுக்கட்டை கொடுத்தபடி இருக்க மறுபக்கம் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட அரசுக்கு எதிரான நிலையை தீவிரப்படுத்தியுள்ளன.

குறிப்பாக ஏழை விவசாயிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கும் பிரச்சினையை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தீவிரமாக கையில் எடுத்துள்ளன. உச்சகட்டமாக, வீட்டு மனைப் பட்டாக்களை கொடுக்க அரசு தவறியதைக் கண்டித்து, அரசு அலுவலங்களில் குடிபுகும் போராட்டத்தை நடத்தப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது கருணாநிதியை எரிச்சல்படுத்தி விட்டது.

இருந்தாலும் வெளிப்படையாக தனது கோபத்தைக் காட்டாமல் போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தார் கருணாநிதி. அதை ஏற்று அந்தப் போராட்டத்தைக் கைவிட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இருப்பினும் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.

மறுபக்கம் இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன், ஏழை விவசாயிகளுக்கு முறையாக இலவச நிலங்களைக் ெகாடுக்காவிட்டால் நேரடியாக களத்தில் இறங்கி நிலங்களைக் கைப்பற்றுவோம் என்று எச்சரித்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி என்ற ஒன்றே கிடையாது என்றும் கூறியுள்ளார் பாண்டியன்.

இப்படி கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கியக் கட்சிகள் மூன்றும் அரசுக்கு எதிராகவும், அரசின் திட்டங்களை எதிர்த்தும் தொடர்ந்து ேபாராட்டம், கண்டன அறிக்கை, பேட்டி, கருத்துக் கேட்பு என்று தீவிரமாக ஈடுபட்டு வருவதால் முதல்வர் கருணாநிதி கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

மறுபக்கம், காங்கிரஸ் கட்சி அமைதியாக இருப்பது ேபாலத் தெரிந்தாலும், ஆட்சியில் பங்கு ேவண்டும் என்ற அந்தக் கட்சியின் அனத்தல் ெதாடர்ந்து கொண்டுதான் உள்ளது. ஆட்சியில் எப்படியாவது பங்கு வாங்கி விட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே அந்தக் கட்சி, ஆட்சியை வெளிப்படையாக விமர்சிக்காமல் அமைதி காத்து வருகிறது.

பாமகவுக்கும், திமுகவுக்கும் இடையிலான நல்லுறவு, உள்ளாட்சித் தேர்தலின்ேபாதே முழுமையாக அற்றுப் போய் விட்டதாக தொண்டர்கள் அளவில் கூறப்படுகிறது. கொடுப்பதாக கூறிய பதவிகளை திமுகவினரே சிண்டிகேட் அமைத்துப் பறித்து விட்டதால் இன்னும் கூட பாமகவினர் கடும் கோபத்துடன் உள்ளனர்.

மேலும் ரத்து செய்யப்பட்ட கூட்டுறவுத் தேர்தலின்ேபாது, சேலத்தில் பாமகவினர் மீது போலீஸாரும், திமுகவினரும் நடத்திய தாக்குதலை பாமகவினர் சீரியஸாக எடுத்துக் ெகாண்டுள்ளனர்.

இப்படி முழு அளவில் பாமக, திமுக இடையே பகைமை உணர்வு வளர்ந்து வேரூண்றி விட்டது. பெயரளவுக்குத்தான் திமுக, பாமக ஆகியவை தோழமைக் கட்சிகளாக உள்ளன. அதே நிலையில்தான் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் உள்ளன.

இந்தச் சூழ்நிலையில் முதல்வர் கருணாநிதி இவற்றை எப்படிச் சமாளிக்கப் போகிறார், கூட்டணி உடையுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. பிரச்சினைகளை சமாளிப்பதில் கருணாநிதிக்கு யாரும் பாடம் சொல்லித் தர தேவையில்லை.

அத்தனைப் பிரச்சினைகளுக்கும் சேர்த்து ஒரே மருந்தாக காங்கிரஸை ஆட்சியில் சேர்த்துக் கொண்டு பாமகவை அவர் கழற்றிவிடக் கூடும் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+