பிரதமர் குறித்து கீழ்த்தரமாய் பேசிய பெர்னாண்டஸ்
டெல்லி:பிரதமர் மன்மோகன் சிங் செய்து கொண்ட இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் மாதிரி ஏதாவது ஒப்பந்ததை சீன அதிபர் செய்திருந்தால் அவரை தலையில் சுட்டுக் கொன்றிருப்பார்கள் என முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் பாஜக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறியதற்கு நாடாளுமன்றத்தில் கடும் கண்டனம் எழுந்தது.
இதனால் காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
நேற்று பெர்னாண்டஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார்.
![]() |
இதற்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் இன்று மக்களவையிலும் மாநிலங்களவையிலும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தீவிரவாதத்தைத் தூண்டிவிடும் பெர்னாண்டஸை கைது செய்ய வேண்டும், அவையை விட்டு சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பல உறுப்பினர்கள் கோரினர்.
நாடாளுமன்ற விவகாரத்துறை அைமச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி பேசுகையில், ஒரு மூத்த தலைவர் பேசுகிற பேச்சா இது. அவர் தனது அறிக்கையை வாபஸ் பெற வேண்டும் இல்லாவிட்டால் மன்னிப்பு கோர வேண்டும்.
அவரது மன நிலை சரியாக இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. மன நிலை சரியில்லை என்றால் அப்படியே இந்த பிரச்சனையை விட்டுவிடலாம். இல்லாவிட்டால் பெர்னாண்டசை அத்வானியும் கண்டிக்க வேண்டும் என்றார்.
நிதியமைச்சர் சிதம்பரம் உள்ளிட்ட பலரும் பெர்னாண்டஸை மிகக் கடுமையாகக் கண்டித்துப் பேசினர். ஆனால், அப்போது அவையில் இருந்த பெர்னாண்டஸ் அமைதியாக அமர்ந்திருந்தார்.
பெர்னாண்டசுக்கு ஆதரவாக பாஜக உறுப்பினர்கள் பேச முயன்றபோது காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மிகக் கடுமையாக எதிர்த்து குரல் தந்தனர். இதனால் அவையில் கூச்சல் நிலவியது.
அவர் வெளியில் பேசிய பேச்சுக்கோ அல்லது அறிக்கைக்கோ அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. அதே நேரத்தில் பிரதமர் தொடர்பாக ஜார்ஜ் பேசியது மிக மட்டமான செயல் என்று கூறிய சபாநாயகர் காங்கிரஸ் உறுப்பினர்களை அமரச் சொன்னார். ஆனால், யாரும் செவி சாய்க்காமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
பெர்னாண்டசின் அமைதியை இந்த நாடும் அவையும் பார்த்துக் கொண்டுள்ளது என்ற சபாநாயகர் குழப்பம் அதிகமானதால் அவையை ஒத்தி வைத்தார்.
ராஜ்யசபா ஒத்தி வைப்பு:
அதே போல அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியினரும் இடதுசாரி கட்சிகளும் பிரதமர் மன்மோகன் சிங்கை தாக்கி கோஷம் எழுப்பியதால் அவை நாள் முழுவதற்கும் ஒத்தி வைக்கப்பட்டது.













Click it and Unblock the Notifications