ஐ.நா. தூதர் ஒரு தீவிரவாதி: இலங்கை அமைச்சர் திடீர் பாய்ச்சல்
கிளிநொச்சி:ஐ.நா. மனித உரிமை விவகாரப் பிரிவு செயலாளர் ஜான் ஹோம்ஸ் விடுதலைப் புலிகளிடம் காசு வாங்கி விட்டார். அவர் ஒரு தீவிரவாதி என்று இலங்கை அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ கூறியுள்ள புகாரால் ஐ.நா. வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இலஙகையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சண்டையில் அப்பாவிகள் பலர் அநியாயமாக பலியாவது குறித்து விசாரிக்கவும், இரு தரப்புக்கும் இடையே தடைபட்டுப் போயுள்ள பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும் இலங்கை வந்திருந்தார் ஹோம்ஸ்.
தனது இலங்கை பயணத்தின்போது அப்பாவிகள் பலர் சாவதற்கு இலங்கை பாதுகாப்புப் படையினர்தான் காரணம் என குற்றம் சாட்டியிருந்தார் ஹோம்ஸ். இதற்கு இலங்கை பிரதமர் மறுப்பு தெரிவித்திருந்தார். ஆனால் அவரை விட ஒரு படி மேலே போய், அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ மிகக் கடுமையாக ஹோம்ஸ் விமர்சித்துள்ளார்.
ஹோம்ஸ் குற்றச்சாட்டு குறித்து ஜெயராஜ் கூறுகையில் தீவிரவாதிகளை ஆதரிப்போரை நாங்கள் தீவிரவாதிகளாகத்தான் பார்ப்போம். அந்த வகையில் விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் ஹோம்ஸும் ஒரு தீவிரவாதிதான். அவர் புலிகளிடம் காசு வாங்கியிருப்பார். எனவே அவர் கூறுவதை நாங்கள் ஏற்கவே முடியாது என்று கடுமையாக கூறியுள்ளார் ஜெயராஜ்.
ஜெயராஜின் இந்தப் பேச்சு ஐ.நா. அதிகாரிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.நா. தூதர் ஒருவரை தீவிரவாதி என்று இலங்கை அமைச்சர் கூறியிருப்பது தேவையற்றது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
தமிழர்களைக் கொன்று குவிக்கும் ராணுவம் - புலிகள்
இதற்கிடையே, யாழ்ப்பாணத்தில் அப்பாவித் தமிழர்களை ராணுவமும், துணை ராணுவப் படைகளும் கொன்று குவித்து வருகின்றன. அப்பாவித் தமிழ் இளைஞர்கள் கடத்தப்படுவதற்கும் ராணுவமே காரணம் என விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ள அரசு ஊழியர்கள், பள்ளி மாணவ, மாணவியரை தெடார்ந்து குறி வைத்து இலங்கை பாதுகாப்புப் படைகள் தாக்கி வருகின்றன.
யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் அப்பாவித் தமிழர்களைக் கொல்வதும், கடத்துவதும் தொடர்ந்து நடந்து ெகாண்டுள்ளன. இதுகுறித்து யாரும் கவலைப்படுவது போலவே தெரியவில்லை. கடந்த 12 நாட்களில் மட்டும் 2 அரசு ஊழியர்கள், 2 பள்ளிக் குழந்தைகள் உள்பட 12 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் 8 பேரை கடத்திச் சென்றுள்ளனர். 10 தமிழர்கள் பாதுகாப்புப் படையினரிடமிருந்து பாதுகாப்பு கோரி யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணையத்திடம் அடைக்கலம் கேட்டுள்ளனர்.
விசாரணை என்ற பெயரில் இலங்கை ராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவோர் திரும்பி வருவதே இல்லை. பலர் கொல்லப்பட்டு விடுகின்றனர், பலர் காணாமலே போய் விடுகின்றனர்.
கடத்தல் குறித்து யாருக்கும் சொல்லக் கூடாது என்று அப்பாவி மக்களை துப்பாக்கி முனையில் ராணுவம் மிரட்டுகிறது.
இந்த சட்டவிரோத படுகொலைகள், கடத்தல் சம்பவங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து வெளியில் யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக அடக்குமுறையைக் கையாளுகிறது இலங்கை அரசு.
சில தினங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிவில் உரிமைப் பிரதிநிதிகளின் சந்திப்பு நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் தமிழர்கள் என்ன பேச வேண்டும், எதுகுறித்து பேசக் கூடாது என்று முன்கூட்டியே ராணுவ அதிகாரி சந்திரஸ்ரீ மக்களை எச்சரித்து வைத்திருந்தார்.
இந்தக் கூட்டத்தில் ஐ.நா. மனித உரிமை விவகாரப் பிரிவு செயலாளர் ஜான் ஹோம்ஸ் கலந்து கொண்டார். அவரிடம் மனித உரிமை மீறல்கள் குறித்து கண்டிப்பாக எதுவும் கூறக் கூடாது என்று சந்திரஸ்ரீ எச்சரித்திருந்தார்.
ஏ9 சாலையை மூடி விட்ட இலஙகை ராணுவம், யாழ்ப்பாணத்தை திறந்த வெளி சிறைச்சாலையாக மாற்றியுள்ளது. கண்மூடித்தனமாக நடத்தப்படும் படுகொலைகள், கடத்தல்கள், எண்ணற்ற மனித உரிமை மீறல்கள், இன்னும் சொல்ல முடியாத அளவுக்கு நடந்து கொண்டிருக்கும் அடக்குமுறைகளால் யாழ்ப்பாணமே சுடுகாடாக மாறி வருகிறது.
ஒரு பக்கம் உணவு, மருந்துகள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இன்னொரு பக்கம் உயிர் பயத்தில் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் நடந்து வரும் இனப் படுகொலை மற்றும் கடத்தல்களுக்கு முழுப் பொறுப்பும் இலங்கை ராணுவம்தான். இதை சர்வதேச சமுதாயம் உடனடியாக கண்டிக்க வேண்டும். தமிழ் மக்கள், இலங்கை படையினரின் கையில் சிக்கித் தவிக்கும் அவல நிலையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த இனப் படுகொலையை தலைமை தாங்கி நடத்தி வரும் ராணுவ கமாண்டர் சந்திரஸ்ரீ உள்ளிட்ட ராணுவத்தினர் சர்வதேச கிரிமினல் நீதிக்கு முன்பு நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications