கருணாநிதி ஸ்டைலில் ராமதாஸ்!!
விழுப்புரம்:முதல்வர் கருணாநிதி திமுகவின் முரசொலி நாளிதழில் தானே கேள்வி கேட்டு பதிலும் எழுதுவார். அதையே பின்பற்ற ஆரம்பித்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
நிருபர்களை சந்தித்த அவர் முதலில் ஒரு கேள்வி-பதில் அறிக்கையைத் தந்தார். அதில் அவரே 4 கேள்விகள் கேட்டு கருணாநிதி ஸ்டைலில் மிகப் பெரிய பாராக்களுடன் 4 பதில்களும் தந்திருந்தார்.
அந்த கேள்வி-பதில் அறிக்கை விவரம்:
கேள்வி: சில அரசியல் கட்சிகள் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எதையும் பேசலாம், எத்தகைய போராட்டத்தையும் நடத்தலாம் என்ற நிலைமை வளர்ந்துவிட்டது என்று முதல்வர் குற்றம் சுமத்தியிருக்கிறாரே
பதில்: இந்த கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன் கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக நடந்த சில போராட்டங்களை உங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
வருங்கால வைப்புநிதி வட்டி குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம். விமான நிலையங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்களை தனியார் மயமாக்க நடக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் தனியார் மயமாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கும் போராட்டம்,
சில்லறை வணிகத்தில் பெரும் தொழில் நிறுவனங்கள் நுழைவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்ட போதெல்லாம் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம், அணி திரட்டப்படாத தொழிலாளர்களின் நலன்களை காக்க தவறிவிட்டதாக குற்றம் சாட்டி மறியல் என இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவையெல்லாம் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியும் இதர இடதுசாரி கட்சிகளும் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக வலியுறுத்தி நடத்திய போராட்டங்கள்.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை. அதனால் இடதுசாரி கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்து கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் பகிரங்கமாக கருத்துக்களை வெளியிடுகிறார்கள், விமர்சிக்கிறார்கள். போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்துகிறார்கள்.
இடதுசாரி கட்சிகள் அரசை ஆதரித்து கொண்டே வெளியில் இப்படியெல்லாம் அமைதியை குலைக்க ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டவில்லை. கட்சியை வளர்த்து கொள்ளப்பார்க்கிறார்கள் என்று பழி சுமத்தவில்லை.
மாறாக, ஒவ்வாரு கட்டத்திலும் இடதுசாரி கட்சி தலைவர்களை பிரதமர் அழைத்து பேசுவார். அவசியப்படும்போது சோனியா காந்தியே நேரடியாக இடதுசாரி தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார். பலன் ஏற்படவில்லை என்றால் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை கூட்டுகிறார்கள். ஒன்றாக அமர்ந்து கருத்து பரிமாற்றம் செய்கிறார்கள். தேவையான விளக்கங்களை அளிக்கிறார்கள். மத்தியில் இப்படித்தான் காரியங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
இங்கே திமுக ஆட்சி நடக்கிறது. ஆனால் சட்டசபையில் பெரும்பான்மை இல்லை. கூட்டணி கட்சிகள் வெளியில் இருந்து ஆதரிக்கின்றன். அதே நேரத்தில் பாமகவும், இடதுசாரி கட்சிகளும் தங்கள் கொள்கைக்கு ஏற்ப கருத்துக்களை வெளியிடுகிறோம். தேவைப்படும்போது போராட்டம் நடத்துகிறோம்.
ஆனால் மத்தியில் இருப்பதைப்போல இங்கு பேசித் தீர்க்க ஒருங்கிணைப்புக் குழு இல்லை. தேவைப்படும்போது தலைவர்களை அழைத்து பேசியிருக்கலாம், ஆனால் அதுவும் இல்லை. கூட்டணி, தோழமை என்று இருந்தாலும் ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி கொள்கைகள், செயல் திட்டங்கள் இருக்கின்றன. ஒரு கட்சிக்கு சரி என்று பட்டால் அடுத்த கட்சிக்கும் அது சரி என்று தெரியவேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில் கருணாநிதி தலைமையிலான அரசு எடுக்கும் சில முடிவுகளை ஆதரிக்கிறோம். சில முடிவுகளை எதிர்க்கிறோம்.
இப்படி காரியமாற்றுவதில் எந்தச் சிக்கலும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இப்படி செயல்படுவதை தங்களை வளர்த்துக் கொள்வதற்கான செயல் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?
கேள்வி: முடிவெடுக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று முதல்வர் சொன்னதற்கு என்ன அர்த்தம்?
பதில்: முதல்வர் என்ன கருதுகிறார் என்றெல்லாம் உங்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். இதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால் இதற்கான காரணம் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ள பகுதிதான் என்னை பெரிதும் பாதிக்க வைத்திருக்கிறது. திரும்ப, திரும்ப அதைப் படிக்கிறேன். மனம் கொதித்து போயிருக்கின்றேன்.
அமைதிக்காகவும், நல்லிணக்கத்துக்காகவும், ஒற்றுமைக்காகவும் இப்படியெல்லாம் பாடுபட்டு வருகிற எங்களை நோக்கி, நாட்டை காடாக்கும் நாகரீகமற்ற முறைகளுக்கு தூபம் போடுபவர்கள் போலவும், வன்முறையைத் தூண்டுபவர்கள் போலவும் பேசி முத்திரை குத்த நடக்கும் முயற்சி என்னை பெரிதும் பாதித்திருக்கிறது. இதனால் மிகவும் மனம் நொந்து போயுள்ளேன்.
கேள்வி: காங்கிரஸ் ஆதரவு மட்டும் போதும் என முதல்வர் நினைக்கிறாரோ?
பதில்: முதல்வர் என்ன நினைக்கிறார் என்பது எனக்கு எப்படி தெரியும். அப்படியெல்லாம் நினைக்க மாட்டார். ஏனெனில் அவர்கள் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று முதல் நாளிலிருந்து கேட்டு வருகிறார்கள் அல்லவா. ஒரு கூட்டணி நீடித்து நிலைத்து வெற்றிகரமாக அமைவதற்கான காரணங்களும், கூட்டணியை உருவாக்குவதற்கு இருந்த காரணங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. இந்தத் தொடர்பு முக்கியமானது. இதை நான் சொல்லவில்லை. கலைஞர் தான் பல ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியிருக்கிறார் என்று ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
வன்முறைக்கு தூபம் போடுவதாக எங்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது. சென்னை நகரில் ஒரே நாளில் 5 கொலைகள் நடக்கிறது. காங்கிரஸ் தொண்டர் முண்டம் தனியாக, தலை தனியாக கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார்.
மதுரையில் பத்திரிக்கை அலுவலகம் மீது மாநகர மேயர் தலைமையிலான கும்பல் நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த அனைத்து உயிர்களும் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது எல்லாம் இந்த திமுக ஆட்சியில் தான்.
எங்களால் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வராது. இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications