அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ரெய்ட்
சென்னை:கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அதிரடி சோதனை நடந்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள சுய நிதி பொறியியல் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அதிரடி ரெய்டுகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து இந்தப் பள்ளிகளிலும் ரெய்டுகள் நடத்தி விசாரணை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது.
நேற்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் கல்வித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் மட்டும் 15 பள்ளிகளில் சோதனைகள் நடந்தன.
இந்த சோதனையின்போது சில பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரிய வந்தது.
இந்த சோதனை குறித்து மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், சில பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகளுக்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதேபோல பல பள்ளிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கான கட்டணத்தை வாங்கிக் கொண்டு உரிய ரசீதுகளை மாணவர்களிடம் தருவதில்லை.
இதுபோன்று அரசு விதிகளை மீறி நடக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications