தாமரைக்கனி மகனுக்கு ஜாமீன் ரத்து:சென்னை கோர்ட்டில் சரண்
சென்னை:கொலை வழக்கில் மறைந்த அதிமுக எம்.எல்.ஏ தாமரைக்கனியின் மகன் ஆணழகனுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவர் சுந்தரியின் கணவர் அண்ணாத்துரை சில மாதங்களுக்கு முன்பு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு தாமரைக்கனியின் குடும்பம்தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து தாமரைக்கனியின் மகன்களான முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன், ஆணழகன், தங்கமாங்கனி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில் இன்பத் தமிழன் முன் ஜாமீன் பெற்று வெளியில் உள்ளார். இந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்த ஆணழகனுக்கு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் வெளியே வந்தார்.
இந்த நிலையில் ஆணழகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி அரசுத் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்ற நீதிமன்றம் ஜாமீனை ரத்து செய்தது.
இதையடுத்து ஆணழகன் தலைமறைவானார். அவரைக் கைது செய்ய போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று சென்னை ஜார்ஜ்டவுண் 7வது நீதிமன்றத்தில் ஆணழகன் சரணடைந்தார். அவரை 30ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஆணழகன் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications