தனியார் கல்லூரிகளில் பி.எட் சேர்க்கை:அரசு உத்தரவு செல்லாது - உயர்நீதிமன்றம்
சென்னை:தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் இனிமேல் அனைத்து இடங்களையும் அந்தந்த கல்லூரி நிர்வாகமே நிரப்பிக் கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தனியார் பி.எட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் 50 சதவீதம் அரசுக்கும், 50 சதவீதம் நிர்வாகமும் பிரித்துக் கொள்ள வேண்டும் என்ற அரசு உத்தரவை எதிர்த்து, தனியார் பி.எட் கல்லூரிகளின் சங்கம் சார்பில் தமிழ்மணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா மற்றும் நீதிபதி ஜோதிமணி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. விசாரணையின் இறுதியில் அரசு உத்தரவு செல்லாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், தனியார் பி.எட் கல்லூரிகளில் 50 சதவீதம் என பிரித்துக் கொள்ள வேண்டியதில்லை. 100 சதவீத இடங்களையும் அந்தந்த கல்லூரி நிர்வாகமே நிரப்பிக் கொள்ளலாம். இதில் அரசின் ஒற்றைச்சாளர முறை தேவையில்லை.
சிறுபான்மை அல்லாத பி.எட் கல்லூரிகள் இட ஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும் என்ற அம்சத்தைப் பொறுத்தவரை கல்லூரி நிர்வாகங்கள் தாங்களாக முன்வந்து 69 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்றுவதாகவும், காலியாக உள்ள இடங்களில் வேறு பிரிவினரை சேர்த்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கூறுவதையும் ஏற்கிறோம்.
அந்தந்த தனியார் கல்லூரிகள் மாணவர்களின் விண்ணப்பங்களை மொத்தமாக பெற்றுக்கொண்டு அரசிடமும், நீதிபதி தணிகாசலம் தலைமையிலான கமிட்டியிடமும் அனுப்ப வேண்டும். மாணவர் சேர்க்கை முடிவுக்குப் பிறகு பட்டியலுக்கு அந்த கமிட்டியிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
மேலும் மாணவர்கள் சேர்க்கை விவரத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும். இதில் முறைகேடுகள் ஏதும் நடந்தால் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications