இன்டர்நெட் மையங்களில் போலீஸ் தீவிர கண்காணிப்பு
சென்னை: சென்னை நகரில் உள்ள இன்டர்நெட் மையங்ளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள காவல்துறை, மையங்களை தீவிரமாக கண்காணிக்கவும் முடிவு செய்துள்ளது.
பல்வேறு பிரபல தலைவர்களுக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல்கள் வருவது அதிகரித்து வருகிறது. அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது, நெல்லையிலிருந்து கொலை மிரட்டல் வந்தது. ஆனால் இதுவரை அந்தக் குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து இன்டர்நெட் மையங்களுக்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. முதலில் அதை போலீஸார் தீவிரமாகவ கண்காணித்தனர். ஆனால் பின்னர் இந்த கெடுபிடி தளர்ந்து விட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் திருச்சியிலிருந்து முதல்வர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் வந்தது. அந்த நபரை பின்னர் போலீஸார் கண்டுபிடித்துக் கைது செய்தனர்.
தொடர்ந்து இ-மெயில் மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதால் மீண்டும் இன்டர் நெட் மையங்களை தீவிரமாக கண்காணிக்க காவல்துறைக்கு சென்னை மாநகர ஆணையர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து இன்டர்நெட் மையங்களுக்கு 26 கட்டுப்பாடுகளை போலீஸார் விதித்துள்ளனர். அவற்றைக் கடைப்பிடிக்காத மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீஸுக்கு ஆணையர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, இன்டர்நெட் மையம் நடத்த உள்ளூர் போலீசாரின் அனுமதி பெற வேண்டும். இல்லையெனில் அந்த மையத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
வாடிக்கையாளர்கள் அமரும் கேபின்களை உயரமாக அமைக்கக் கூடாது.
அனைத்து கம்ப்யூட்டரிலும் வெப் கேமரா இருக்க வேண்டும். அதன்மூலம் வாடிக்கையாளரை புகைப்படம் எடுக்க வேண்டும்.
மாணவர்களை பள்ளி நடக்கும் நேரத்தில் இன்டர்நெட் மையத்தில் அனுமதிக்கக் கூடாது.
சிறுவர்களை எக்காரணம் கொண்டும் இணையதள மையத்திற்குள் அனுமதிக்க கூடாது.
இன்டர்நெட் மையத்திற்கு வருபவர்களது அலுவலகம் அல்லது வீட்டு முகவரியை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications