மணல் கொள்ளை - கிராம மக்கள் குமுறல்:போராட்டத்தில் குதிக்கும் ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

திண்டிவனம்:திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றில் மணல் திருடப்படுவதைக் கண்டித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 20ம் தேதி நேரடியாக போராட்டத்தில் குதிக்கிறார்.

திருவள்ளூர் மாவட்டம் விடையூர் கிராமம் அருகே கொசஸ்தலை ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் நீண்ட நாட்களாக மணல் கொள்ள படு ஜோராக நடந்து வருகிறது.

இதை எதிர்த்து அப்பகுதியினர் பல போராட்டங்கள் நடத்தியுள்ளனர். ஆனாலும் மணல் கொள்ளை நின்றபாடில்லை.

இந்த நிலையில் விடையூர், நெமிலி அகரம், கலியனூர், கடம்பத்தூர், மேல் வாகை, கீழ் வாகை, கண்டிகை, அக்கரகுப்பம், ராமன்கோவில், ஆட்டுப்பாக்கம், ராஜரத்தினபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் (இவர்களில் பலர் திமுகவினர்) நேற்று டாக்டர் ராமதாஸின் இல்லம் உள்ள தைலாபுரத்திற்குத் திரண்டு வந்தனர்.

கிராம மக்கள் பெருமளவில் திரண்டு வந்துள்ள தகவல் ராமதாஸுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரையும் சந்திப்பதற்காக அங்குள்ள மாங்கனி அரங்குக்கு அழைத்து வருமாறு ராமதாஸ் உத்தரவிட்டார்.

பின்னர் அங்கு வந்து கிராமத்தினரை அவர் சந்தித்தார். அப்போது தங்களது கிராமங்களில் நடந்து வரும் மணல் கொள்ளை குறித்து கிராம மக்கள் குமுறலுடன் ராமதாஸிடம் விளக்கினர்.

கிராம மக்களை தலைமை தாங்கி அழைத்து வந்த விடையூர் ஊராட்சித் தலைவரும் திமுகவைச் சேர்ந்தவருமான தமிழ்ச் செல்வியின் கணவர் பெருமாள் உள்ளிட்டோர் ராமதாஸிடம் கூறுகையில், விடையூரைச் சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே சென்னை - அரக்கோணம் ரயில் பாதை உள்ளது. இந்த ஆறு பூண்டி வரை செல்கிறது.

கடந்த 1994ம் ஆண்டு இந்த ஆற்றில் மணல் அள்ளப்பட்டபோது நாங்கள் எதிர்த்துக் குரல் கொடுத்தோம். பலமுறை அதிகாரிகளை சந்தித்து புகார் கொடுத்தோம். இதையடுத்து அதிகாரிகள் தலையிட்டு மணல் அள்ளுவதை நிறுத்தினர். இதனால் ஆறும், நிலத்தடி நீரும், எங்களது பகுதி விவசாயமும் காப்பாற்றப்பட்டது.

ஆனால் தற்போது மணல் கொள்ளை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு 1500 லாரிகளில் மண் அள்ளிச் செல்கிறார்கள். இதனால் ஆறும் பாழ்படுகிறது, எங்களது பகுதியில் நிலத்தடி நீரும் முற்றிலும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறையிடம் புகார் கொடுத்தபோது சப் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி என்பவர் எங்களையே மிரட்டுகிறார். மணல் அள்ளுவதை எதிர்த்தால், இலவச கலர் டிவி உள்ளிட்ட எந்த அரசுச் சலுகையும் கிடைக்காது என்று எங்களை அவர் மிரட்டுகிறார்.

யாரிடம் போனாலும் எங்களுக்கு நிவாரணம் கிடைக்காது. எனவே நீங்கள்தான் தலையிட்டு எங்களைக் காக்க வேண்டும் என்று அவர்கள் ராமதாஸிடம் கூறினர்.

அவர்களை அமைதிப்படுத்திய டாக்டர் ராமதாஸ், உங்கள் பகுதி நலனுக்காக நானே வருகிற 20ம் தேதி அங்கு வந்து போராட்டம் நடத்துகிறேன், கவலைப்படாமல் செல்லுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார்.

அதன்படி 20ம் தேதி விடையூர் - கடம்பத்தூரில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் மணல் திருட்டைத் தடுத்து நிறுத்தக் கோரி போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் கிராம மக்களுடன் பாமகவினரும் பெரும் திரளாக கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தாமிரபரணி ஆற்றில் நடந்து வரும் மணல் கொள்ளையைத் தடுக்க தானே நேரில் போராடப் போவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார். இதையடுத்து அப்பகுதியில் மணல் கொள்ளையைர்களைப் பிடிக்க அரசுத் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கொசஸ்தலை ஆற்றில் நடந்து வரும் மணல் கொள்ளையைத் தடுக்க களத்தில் குதித்துள்ளார் ராமதாஸ் என்பதால் அங்கும் அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+