ஆங்கிலம் தெரியாத வருத்தத்தில் அணைந்த அறிவுச்சுடர்!
சென்னை:நர்சிங் கல்லூரியில் படித்து வந்த அறிவுச் சுடர் என்ற மாணவி, தனக்கு ஆங்கிலம் தெரியவில்லையே என்ற வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அடையாறில் உள்ள செவிலியர் கல்லூரியில் படித்து வந்தவர் அறிவுச்சுடர் (24). இவரது சொந்த ஊர் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி. இவரது தந்தை சிவநீதி.
பள்ளிப் படிப்பை தமிழ் வழிக் கல்வியில் முடித்தவர் அறிவுச்சுடர். இவரது தந்தை மிகுந்த தமிழ்ப் பற்றுக் கொண்டவர். இதனால்தான் தனது மகளுக்கு அறிவுச்சுடர் என்று பெயரிட்டார்.
விடுதியில் தங்கி செவிலியர் படிப்பு படித்து வந்த அறிவுச்சுடருக்கு திடீரென ஆங்கிலக் கல்விக்கு வந்தது பெரும் தடுமாற்றமாக இருந்துள்ளது. பாடங்களை புரிந்து கொள்ள முடியாமல் சிரமப்பட்டார்.
மறுபக்கம், தன்னைத் தந்தை மிகவும் சிரமப்பட்டு படிக்க வைக்கிறார். நமக்கோ ஆங்கிலம் தெரியாததால் பாடங்களை சரியாகப் படிக்கவில்லை. இப்படி இருந்தால் எப்படி பரீட்சையில் தேறி, பட்டம் பெறப் போகிறோம் என்ற கவலை வாட்டியது.
தன்னுடைய தோழிகளிடம் தனக்கு ஆங்கிலம் தெரியவில்லையே என்று அடிக்கடி வருத்தப்பட்டு சொல்லிக் கொண்டிருப்பாராம். இப்படி ஆங்கிலம் தெரியவில்லையே என்ற மன உளைச்சலில் இருந்து வந்த அறிவுச்சுடர், நேற்று காலை தனது விடுதியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு வேறு காரணம் ஏதும் உண்டா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications