தென்காசி: குமார் பாண்டியன் குடும்பத்தினரின்திடீர் போராட்டத்தால் பரபரப்பு
தென்காசி:தென்காசியில் நடந்த பயங்கர சம்பவத்தில் தனது மூன்று மகன்களைக் கொன்றவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி இந்து முன்னணி பிரமுகர் குமார் பாண்டியனின் தந்தை சொர்ணத் தேவர் தனது குடும்பத்தினரின் மொத்தமாக தற்கொலை செய்யப் போவதாக மிரட்டியதால், பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசியில் இந்து முன்னணி பிரமுகர் குமார் பாண்டியன் கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 14ம் தேதி தென்காசி கூலக்கடை பஜார் பகுதியில் குமார் பாண்டியன் சகோதரர்கள் மூன்று பேர் மற்றும் இஸ்லாமிய சமுதாய இளைஞர்கள் மூன்று பேர் ஆக 6 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
குமார் பாண்டியனின் குடும்பத்தில் அவரையும் சேர்த்து மொத்தம் 4 பேர் இதுவரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியும், கொதிப்பும் அடைந்துள்ளனர்.
![]() |
இந்த நிலையில் குமார் பாண்டியனின் சகோதரர் சக்தி பாண்டியனையும் போலீஸார் கைது செய்துள்ளனர். காவல்துறையின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும் சொர்ணத்தேவர் மற்றும் கொலை செய்யப்பட்ட நான்கு பேரின் மனைவிகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் நேற்று திடீரென போராட்டத்தில் குதித்தனர்.
அனைவரும் அப்பகுதியிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்யப் போவதாக கூறியதால் பெரும் பதட்டமும், பரபரப்பும் உருவானது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர்.
அவர்களை டிஐஜி கண்ணப்பன் அமைதிப்படுத்தி சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
பின்னர் சொர்ணத்தேவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் ஆரம்ப கால காங்கிரஸ் தியாகி. எனக்கு தீவிரவாதத்தின் மீது நம்பிக்கை கிடையாது.
கடந்த சம்பவத்திலும், இப்போதைய சம்பவத்திலும் தொழிலதிபர் வி.டி.எஸ். ரஹ்மான் பாட்சா மீது புகார் கொடுத்தும் இதுவரை அவரைக் கைது செய்யாமல் உள்ளனர். இவரிடம் பல நூறு கோடி ஹவாலா பணம் உள்ளது. அந்த பணம் மூலம் வெறி பிடித்தவர்களை ஊக்கப்படுத்துகிறார்.
என் குடும்பத்தில் 4 பேர் பலியானதற்கு அவர்தான் காரணம். பள்ளிவாசல் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இந்த நிலை. இன்னும் 200 வருடம் ஆனாலும் பள்ளிவாசல் கட்ட முடியாது.
இந்த கொலை வழக்கில் காயம் பட்டவர்களைப் போய் அமைச்சர் மைதீன் கான் போய் பார்க்கிறார். இந்துக்களை பார்க்க அவர் தயாரில்லை. இஸ்லாமியர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களை ஊக்கப்படுத்துகிறார்.
இஸ்லாமியர்களுக்கு மட்டும் அவர் அமைச்சர் இல்லை. எனக்கும் அமைச்சர், அனைவருக்கும் அமைச்சர். இந்த சம்பவத்துக்கு மைதீன்கானும் காரணம். நான் தீக்குளிப்பதாக கூறி படம் காட்டவில்லை. உண்மையை கூறுகிறேன் என்றார்.
கொல்லப்பட்டவர்களில் ஒருவரான சொர்ணத்தேவரின் மகன் செந்திலின் மனைவி கூறும்போது, உங்கள் பேனா உண்மையை எழுதட்டும். என் கணவர் சாவுக்கு அரசும் ஒரு காரணம். 18 ஆம்புலன்ஸ் மருத்துவமனையில் இருந்தும் ஒரு ஆம்புலன்ஸ் கூட அனுப்பவில்லை என்றார்.
சொர்ணத்தேவர் குடும்பத்தினரின் இந்த திடீர் போராட்டத்தால் அங்கு பரபரப்பும், பதட்டமும் நிலவியது.













Click it and Unblock the Notifications