புதுக்கோட்டை தொகுதிக்காக அதிமுக உண்ணாவிரதம்:அமைச்சர் ரகுபதிக்கு திருநாவுக்கரசர் கண்டனம்
புதுக்கோட்டை:புதுக்கோட்டை எம்.பி. தொகுதியை நீக்கியதைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தேர்தல் ஆணையம் மேற்கொண்ட தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையில், புதுக்கோட்டை தொகுதி நீக்கப்பட்டு விட்டது. அத்தொகுதியின் கீழ் வந்த சட்டசபைத் தொகுதிகள் பல்வேறு பக்கத்து தொகுதிகளுக்குப் பிரித்து விடப்பட்டுவிட்டன.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்து புதுக்கோட்டையில் பந்த் நடந்தது.
இந் நிலையில் அதிமுக சார்பில் இன்று தேர்தல் பிரிவுச் செயலாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் மதிமுகவினரும் பங்கேற்றனர்.
இதற்கிடையே, தர்மத்திற்கு எதிரான முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், இந்தத் தொகுதியிலிருந்து முன்பு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான பாஜகவைச் சேர்ந்த எஸ்.திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், புதுக்கோட்டை எம்.பியாக தற்போது இருக்கும் மத்திய அமைச்சர் ரகுபதி, இந்தத் தொகுதி மக்களை மதிப்பவராக இருந்தால், உடனடியாக தனது எம்.பி பதவியையும், அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்திருக்க வேண்டும்.
முன்பு மயிலாடுதுறை எம்.பி தொகுதியை தேர்தல் ஆணையம் நீக்க முடிவு செய்தபோது அதை எதிர்த்து குரல் கொடுத்தார் மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யர். அந்த முயற்சியையும் தடுத்து நிறுத்தினார். ஆனால் அப்படி செய்ய ரகுபதி தவறி விட்டார்.
புதுக்கோட்டை தொகுதியை நீக்கியதைக் கண்டித்து பாஜக சார்பில் மாவட்டம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றார் திருநாவுக்கரசர்.
இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரான தேமுதிக துணை பொதுச் செயலாளர் கு.ப.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை தொகுதி நீக்கப்பட்ட விவகாரத்தை அரசியலாக்க திமுகவும், அதிமுகவும் முயலுகின்றன. நாடகமாடுகின்றன.
தொகுதி நீக்கத்தைக் கண்டித்து ஆகஸ்ட் 22ம் தேதி முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications