சத்யமூர்த்தி பவனில் கருணாநிதி:பழைய மகாபலிபுரம் சாலைக்கு ராஜீவ் பெயர்
சென்னை:சென்னை, பழைய மகாபலிபுரம் சாலைக்கு ராஜீவ் காந்தி சாலை என பெயர் சூட்டப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 64வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் சத்தியமூர்த்தி பவனில் பிறந்த நாள் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார். காங்கிரஸ் தலைமையகத்திற்கு கருணாநிதி வருவது இதுவே முதல் முறை என்பதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தியின் படத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், இந்த விழாவிலே, காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி ஒரு கோரிக்கை விடுத்தார். சென்னையில் உள்ள, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்துள்ள, பழைய மகாபலிபுரம் சாலைக்கு ராஜீவ் காந்தியின் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதை ஏற்று இன்று முதல் அந்த சாலைக்கு ராஜீவ் காந்தியின் பெயர் சூட்டப்படும் என்று அறிவிக்கிறேன். நாம் அனைவரும் ஒரே சாலையில் செல்வோம். ஜனநாயகத்தை உறுதி செய்கிற சாலையாக அது இருக்கட்டும்.
சமத்துவத்திற்கும், மனித சமுதாய உயர்வுக்கும் பாடுபட்டவர் ராஜீவ் காந்தி என்றார் கருணாநிதி.
நிகழ்ச்சியில், அமைச்சர் ஆற்காடு வீராசாமி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், குமரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேசமயம், தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ப.சிதம்பரம் மற்றும் ஜெயந்தி நடராஜன், தங்கபாலு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
பின்னர் தலைமைச் செயலகத்தில் நடந்த மத நல்லிணிக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியிலும் முதல்வர் பங்கேற்றார்.












Click it and Unblock the Notifications