மின்சாரம் பாய்ந்து முதிய தம்பதி பலி:காப்பாற்றப் போன மகன் படுகாயம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே வயலில் விழுந்து கிடந்த மின்சார வயரைத் தொட்டு விட்ட முதிய தம்பதி பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். அவர்களைக் காப்பாற்ற முயன்ற மகனும் தீயில் கருகி படுகாயமடைந்தார்.
காஞ்சிபுரம் மதுராந்தகம் அருகே உள்ள கீழ்வழம் பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (60). இவரது மனைவி சின்னப் பொண்ணு (50). இவர்கள் இருவரும் அரையப்பாக்கம் என்ற இடத்தில் உள்ள வயலுக்குச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது முன்தினம் பெய்த கன மழையால் மின்சார ஒயர் அறுந்து கீழே விழுந்து கிடந்தது. இதை அறியாத அந்தத் தம்பதியினர் மிதித்து விட்டனர். இதனால் இருவர் உடலிலும் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களது மகன் குமார் (20) ஓடிச் சென்று காப்பாற்ற முயன்றார். அப்போது அவரது உடலிலும் மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டார்.
படுகாயமடைந்த நிலையில் அவர் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications