நள்ளிரவில் தள்ளுமுள்ளு - நடுரோட்டில் தாலி கட்டல்!
தேனி:தேனியில் கல்யாணம் செய்து கொள்வதாக கூறி விட்டு திடீரென ஜகா வாங்கிய வக்கீலுக்கும், பெண் வீட்டாருக்கும் இடையே நள்ளிரவில் காவல் நிலையம் முன்பு அடிதடி, தகராறு நடந்தது. பின்னர் நடு ரோட்டில் வைத்து மாப்பிள்ளையை பெண் கழுத்தில் தாலி கட்ட வைத்து விட்டு அனுப்பினர் பெண் வீட்டார்.
தேனி மாவட்டம் வாலிப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் வக்கீல் கணேசன். இவருக்கும், சின்னமனூரைச் சேர்ந்த மொக்கத்தேவர் மகள் விமலாவுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது.
நிச்சயதார்த்தத்திற்குப் பின்னர் மாப்பிள்ளையும், பெண்ணும் அடிக்கடி செல்போனில் பேசி அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.
எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருந்த நிலையில் திடீரென திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளார் கணேசன். மேலும் வேறு பெண்ணைத் திருமணம் செய்யப் போவதாகவும் அறிவித்தார்.
இதனால் மொக்கத் தேவர் குடும்பம் கோபமடைந்தது. விமலாவுடன் கணேசன் செல்போனில் பேசியதை ரெக்கார்ட் செய்து, அதை சிடியில் போட்டு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சுதாகரிடம் மொக்கத் தேவர் குடும்பம் கொடுத்து புகார் செய்தது.
இதையடுத்து விசாரணைக்கு உத்தரவிட்டார் கண்காணிப்பாளர் சுதாகர். அதன் பேரில் தேனி இன்ஸ்பெக்டர் சேது, இரு தரப்பினரையும் விசாரணைக்கு வருமாறு அழைத்தார். அதன்படி இரு தரப்பும் தங்களது வக்கீல்களுடன் விசாரணைக்காக காவல் நிலையம் வந்தனர்.
காவல் நிலையத்தில் விமலாவைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்தார் கணேசன். அதற்கு விமலா தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நள்ளிரவு வரை நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு முடிவும் ஏற்படாததாலும், இரு தரப்பினரும் மாறி மாறி கத்திக் கொண்டும், சண்டை போட்டபடியும் இருந்ததாலும், எல்லோரும் வெளியே போய் சமரசமாக பேசி விட்டு வாருங்கள் என்று இன்ஸ்பெக்டர் சேது அனுப்பி வைத்தார்.
காவல் நிலையத்திற்கு வெளியே வந்த கணேசன் அங்கிருந்து செல்ல முயன்றார். ஆனால் அவரை அங்கிருந்து நகர விடாமல் தடுத்த பெண் வீட்டார், மணப்பெண் விமலாவை வரவழைத்தனர். பின்னர் தாலியும் கொண்டு வரப்பட்டது.
இங்கேயே, இப்பவே கட்டு தாலியை என்று கணேசனுக்கு விமலா தரப்பினர் உத்தரவிட்டனர். இதை கணேசன் தரப்பு எதிர்த்தது. இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளும், தொடர்ந்து அடிதடியும் நடந்தது.
அப்படியும் அசராத விமலா குடும்பத்தினர் மாப்பிள்ளையை ஆளுக்கு ஒரு பக்கமாக இறுக்கப் பிடித்துக் கொண்டனர். பின்னர் அவரது கழுத்திலும் விமலா கழுத்திலும் மாலையைபப் போட்டனர்.
இப்ப கட்டுப்பா தாலியை என்று அவரது கையில் தாலியைக் கொடுத்து கட்டுமாறு வற்புறுத்தினர். தப்பிக்க வழியில்லாமல் போனதால் கணேசனும் தாலியைக் கட்டினார், மாலையையும் மாற்றினார். அதன் பிறகே அவரை விட்டனர் விமலா குடும்பத்தினர்.
நடுரோட்டில் நடந்தாலும் கல்யாணம் நல்லபடியாக முடிந்ததே என்ற ஆனந்தக் கண்ணீருடன் விமலா தன் குடும்பத்தார், உறவினர்களுடன் வீட்டுக்குத் திரும்பினார். கட்ட வச்சுட்டாங்களே என்ற கோபத்தில் தனது வீட்டுக்கு வக்கீல் கணேசன் சென்றார்.
நடுரோட்டில், நள்ளிரவில் நடந்த இந்தக் கல்யாணம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications