ஒட்டப்பிடாரம்: நிலத்தகராறில் இரட்டைக் கொலை
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் நிலத்தகராறில் இரண்டு பேரை வெட்டிக் கொன்ற விவசாயியை போலீஸார் கைது செய்தனர்.
ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கோடப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் செல்லையா (55). அதே ஊரைச் சேர்ந்தவர் செல்லத்துரை.
இருவருக்கும் பல ஆண்டுகளாக நிலத் தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 2005ம் ஆண்டு செல்லையா தனது தம்பி பன்னீர் செல்வத்தின் நிலத்தை கோவில்பட்டியைச் சேர்ந்த முத்து என்பவருக்கு விற்றுவிட்டார்.
![]() |
ஆனால் முத்துவுக்கு விற்கப்பட்ட நிலத்தில் செல்லத்துரை விவசாயம் செய்ய முயன்றுள்ளார். இதைத் தட்டிக் கேட்ட செல்லையாவும், அவரது உறவினர் பொன்ராஜூம், செல்லத்துரையை தாக்கியுள்ளனர்.
செல்லையா அடித்ததால் அவர் மீது கடும் கோபத்தில் இருந்தார் செல்லத்துரை. அவரைப் பழி வாங்க முடிவு செய்த அவர் நேற்று அதிகாலை அரிவாளுடன் செல்லையா வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
அப்போது செல்லையாவும், அவரது தாயார் காளமாடத்தியும் (75) தூங்கிக் கொண்டிருந்தனர். உள்ளே புகுந்த செல்லத்துரை, செல்லையா மற்றும் காளமாடத்தியை சரமாரியாக வெட்டித் தள்ளினார்.
இதில் தாயும், மகனும் துடிதுடித்து இறந்தனர். பின்னர் செல்லத்துரை அங்கிருந்து ஓடி விட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
விளாத்திகுளம் டிஎஸ்பி சியாமளா தேவி தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய செல்லத்துரை பின்னர் கைது செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்ட செல்லையாவின் மகன்கள் இருவரும் டெல்லியில் படித்து வருகிறார்களாம். செல்லையாவின் தம்பி பன்னீர்செல்வம் டெல்லியில் மத்திய அரசு உயர் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட செல்லத்துரையிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications
